தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக திரு.வி.க நகர் தனித்தொகுதியில் போட்டியிடும் பொற்கொடி ஆம்ஸ்டராங் அவர்களுக்கு இயக்குநர் பா ரஞ்சித் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். சனாதன எதிர்ப்பு அரசியல் பேசி வரும் ரஞ்சித் பாரதிய ஜனதா கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பா ரஞ்சித்தையும் அவரது படங்களையும் தொடர்ச்சியாக விமர்சித்து வந்த மோகன் ஜி இந்த விஷயத்தில் ரஞ்சித்திற்கு ஆதரவாக குரலெழுப்பியுள்ளார். 

Continues below advertisement

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்த தேர்தலில்  ஆளும் கட்சியான திமுக 164 தொகுதிகளில் களமிறங்கும் நிலையில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு 70 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேநேரம் தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்துள்ள அஇஅதிமுக 165 தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் களமிறங்குகிறது. அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள சிறிய கட்சிகளும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகின்றன. 

பொற்கொடிக்கு பா ரஞ்சித் ஆதரவு 

அதிமுக சார்பாக திருவிக நகர் தனித்தொகுதியில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் போட்டியிட இருக்கிறார். இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் கி ஆம்ஸ்ட்ராங் அவரது மனைவி ஆவார். தனது எக்ஸ் பக்கத்தில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து ரஞ்சித் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர்  " எளிய மக்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டுமென்பதற்காகவும்,அடித்தள மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தம் இறுதிக் காலம் வரை பணியாற்றி வந்தவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங். கடந்த 2024 ஆம் ஆண்டு அவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரின் அரசியல் பணியை தொடர்ந்து முன்னெடுக்க தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியை தொடங்கினார் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் விரும்பிய சமூக அரசியல் பயணத்தை தொடருகிறவராகவும், அவர் கொலைக்கு நியாயம் கிடைக்க போராடுபவராகவும் திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் பாதை அமைந்திருக்கிறது. இந்நிலையில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திரு.வி.க நகர் (தனி) தொகுதியில், அஇஅதிமுக வுடன் கூட்டணியில் இணைந்து இரட்டை இலை சின்னத்தில் களம் காண்கிறார். அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் மீது அபிமானம் கொண்டவர்களுக்கான இன்றியமையாத தருணமாக இது அமைந்திருக்கிறது. தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி முன்னெடுத்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே திருமிகு பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் தேர்தல் பங்கெடுப்பும், அதில் அவர் பெற வேண்டிய வெற்றியும் அமைந்திருக்கிறது. இந்த புரிதலோடு திரு.வி.க.நகர் தேர்தலில் போட்டியிடும் அவருக்கு நீலம் பண்பாட்டு மையம் வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறது." என்று கூறியுள்ளார். 

Continues below advertisement

மோகன் ஜி ஆதரவு 

பா ரஞ்சித் தனது படங்களில் தொடர்ச்சியாக சனாதன எதிர்ப்பும் பாஜக எதிர்ப்பும் பேசி வருகிறார். தலித் மக்களுக்கு தனித்த அதிகாரம் கேட்டுவந்த ரஞ்சித் பாஜகவுடன்  கூட்டணி கட்சிக்கு ஓட்டு கேட்டுட்டு இருக்காரே என பலர் அவரை விமர்சித்து வருகிறார்கள்.  இப்படியான  நிலையில் பா ரஞ்சித்திற்கு ஆதரவாக இயக்குநர் மோகன் ஜி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். " காலம் காலமா நீங்க கட்டமைத்த பிம்பம் அது.. நாங்க ரெண்டு பேரும் என்ன பரம்பரை எதிரியா.. சிந்தனை ஒரே இடத்தில் சேரும் போது, இருவரும் ஒருவரை ஆதரிப்பது என்ன தப்பு.. அந்த அம்மையார் வெல்லட்டும்.. உங்களை வெல்வதே எங்கள் நோக்கம்.. கதறு கதறு.." என மோகன் ஜி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.