MODI BJP Alliance: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த எம்.பிக்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.


பிரதமராக தேர்வு செய்யப்பட்ட மோடி:


அதில்  கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் முன்மொழிய, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் வழிமொழிந்தனர். கூட்டணி கட்சிகளின் எம்.பிக்கள் மற்றும் நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல தலைவர்களும்  பங்கேற்று, மோடியை மீண்டும் பிரதமராக்க ஆதரவளித்தனர். அதனடிப்படையில், பாஜக கூட்டணியின் பிரதமராக மோடி தேர்வு செய்யப்பட்டதாக ஜே.பி. நட்டா அறிவித்தார்.


உரிமை கோருகிறார் மோடி?


கூட்டத்தை தொடர்ந்து, மத்தியில் மீண்டு ஆட்சி அமைப்பதற்காக, குடியரசு தலைவரிடம் இன்றே மோடி உரிமை கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில், மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை பங்கேற்கும் என கூறப்படுகிறது. அதில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், சிராக் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனதா தளம், குமாரசுவாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் பவன் கல்யாண் தலைமையிலான ஜனசேனா ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்களும் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என கூறப்படுகிறது.


அமித் ஷா பேச்சு:


அமித் ஷா பேசுகையில், “ மீண்டும் பிரதமராக மோடியை முன்மொழியும் திட்டம் இங்கு அமர்ந்திருக்கும் மக்களின் விருப்பம் மட்டுமல்ல. நாட்டில் உள்ள 140 கோடி மக்களின் முன்மொழிவு. நாட்டின் குரலாக அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிரதமர் மோடி நாட்டை வழிநடத்துகிறார். மக்களவைத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றதற்காக அனைவருக்கும் எனது வாழ்த்துகள். மக்களவைத் தலைவராகவும், பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவராகவும் நரேந்திர மோடியின் பெயரை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்மொழிந்துள்ளார். இதை நான் முழு மனதுடன் ஆதரிக்கிறேன்” என தெரிவித்தார்.






சந்திரபாபு நாயுடு பாராட்டு:


கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு பேசுகையில், ”அற்புதமான பெரும்பான்மையை பெற்றுள்ளதால், கூட்டணியைச் சேர்ந்த அனைவரையும் வாழ்த்துகிறோம். தேர்தல் பரப்புரையின் போது, ​​பிரதமர் மோடி 3 மாதங்களாக ஓய்வே எடுக்கவில்லை. இரவும் பகலும் ஓய்வெடுக்கவில்லை. ஆந்திராவில் 3 பொதுக் கூட்டங்கள் மற்றும் 1 பெரிய பேரணியை நடத்தி, ஆந்திராவில் வெற்றி பெற்றதில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம். உள்துறை அமைச்சர் அமித் ஷா மிகவும் சக்திவாய்ந்த, ஆந்திரா பொதுக்கூட்டத்தில் உரையாற்றியது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. பல தலைவர்கள் ஆந்திராவுக்கு வந்து பேரணிகளில் உரையாற்றினர். இது நம்பிக்கையை அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 10 ஆண்டுகளில் பல முக்கிய முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது என்பதை மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். இதேபோன்று நிதிஷ்குமார் மற்றும் குமாரசுவாமி போன்ற தலைவர்களும், பாஜகவிற்கு ஆதரவளிப்பதாக கூட்டணியில் உறுதியளித்தனர்.