திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளராகக் களமிறங்க உள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆட்டோ ஓட்டி வாக்கு சேகரித்தார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவர், ’’மக்களின் பயண வழிகாட்டிகளாக, தோழர்களாகத் திகழும் நமது ஆட்டோ ஓட்டுநர்கள் உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு தெரிவித்தார்கள்.
திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நன்றியைத் தெரிவித்து, பேரணியையும் தொடங்கி வைத்தோம்’’ என்று தெரிவித்துள்ளார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஆட்டோ ஓட்டி வாக்கு சேகரிப்பா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சிமெண்ட் கிராதி செய்த திமுக வேட்பாளர்
அதேபோல செய்யாறு தொகுதி திமுக வேட்பாளர் ஜோதி சிமெண்ட் ஜாலி (கிராதி) செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் இளங்கோவன், பொதுமக்களுக்கும் குழந்தைகளுக்கும் ஐஸ் வாங்கிக் கொடுத்து வாக்கு சேகரித்தார். அதேபோல திருப்பத்தூர் தவெக வேட்பாளர் திருப்பதி காய்கறி விற்பனை செய்தார்.
துணி துவைத்துக் கொடுத்த வேட்பாளர்
கடந்த தேர்தலில் நாகை தொகுதி அதிமுக வேட்பாளர் ஒருபடி மேலே போய், மக்களின் துணிகளைத் துவைத்துக் கொடுத்தார். தற்போது லால்குடி தொகுதி சுயேச்சை வேட்பாளர் மன்சூர் அலி கான், துணிகளைத் துவைத்து வாக்கு சேகரித்து வருகிறார்.
இன்னும் எத்தனை எத்தனையோ கட்சி வேட்பாளர்கள், பூ கட்டியும் டீ ஆற்றியும், தத்தமது தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பரோட்டா போடுகின்றனர், வடை சுடுகின்றனர். பொது மக்களை வீடு வீடாகச் சென்று சந்தித்து, ஆதரவு கோரியும் வருகின்றனர்.
சைக்கிள் ஓட்டிய விஜய்
இதற்கிடையே முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து வாக்குச் சேகரித்தார். அதேபோல தவெக தலைவர் விஜய், காரைக்குடி தேர்தல் பிரச்சாரத்தின்போது திடீரென சைக்கிள் ஓட்டி, விசில் சின்னத்துக்கு வாக்குச் சேகரித்தார்.
சுத்திச் சுத்தி வந்தீக
தேர்தல் காலங்களில் மட்டும் தங்களைச் சுற்றிச் சுற்றி வரும் வேட்பாளர்கள், எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் ஆனதும், எள்ளளவும் தங்களைக் கண்டுகொள்வதில்லை என்று தொகுதி மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில், திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தவெக ஆகிய கட்சிகள் களத்தில் காத்திரமாகப் பணியாற்றி வருகின்றன. இவர்களுக்கு இடையில் நான்கு முனைப் போட்டி நிலவி வருகிறது.
தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், அனைத்து வேட்பாளர்களும் வாயு வேகத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அனல் பறக்கும் வெயிலைக் காட்டிலும், தமிழ்நாட்டுக் களம் தேர்தலால் தகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
