மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பாராளுமன்ற தேர்தல் 2024 அறிவிப்பினை அடுத்து அது தொடர்பாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஏ.பி.மகாபாரதி  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்திய தேர்தல் ஆணையம் பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 19 - 2024 ஆகும். வாக்கு எண்ணிக்கை நாள் ஜீன் 4 - 2024 ஆகும். வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27-2024, வேட்பு மனுபரிசீலனை மார்ச் 28. 2024, வேட்பு மனு திரும்ப பெற கடைசி தினம் மார்ச் 30. 2024 ஆகும்.
     


தொகுதி விபரம்:


மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அடங்கியுள்ள 160.சீர்காழி (தனி), 161.மயிலாடுதுறை, 162.பூம்புகார் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 170.திருவிடைமருதூர் (தனி), 171.கும்பகோணம் மற்றும்  172.பாபநாசம் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகள் அடங்கி உள்ளது. மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் சீர்காழி சட்டமன்ற தொகுதியில்  1,22,065 ஆண் வாக்காளர்களும், 1,24,637 பெண் வாக்காளர்களும், 10 மூன்றாம் பாலினத்தவர்களும், மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் 1,16,166 ஆண் வாக்காளர்களும், 1,18,247 பெண் வாக்காளர்களும், 10 மூன்றாம் பாலினத்தவர்களும், பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 13,28,12 ஆண் வாக்காளர்களும், 136755 பெண் வாக்காளர்களும், 3 மூன்றாம் பாலினத்தவர்களும், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் 1,29,218 ஆண் வாக்காளர்களும், 1,32,358 பெண் வாக்காளர்களும், 12 மூன்றாம் பாலினத்தவர்களும், கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் 1,29,737 ஆண் வாக்காளர்களும், 1,36,736 பெண் வாக்காளர்களும், 14 மூன்றாம் பாலினத்தவர்களும், பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 1,68,267 ஆண் வாக்காளர்களும், 1,32,703 பெண் வாக்காளர்களும், 20 மூன்றாம் பாலினத்தவர்களும் ஆக மொத்தம் 7,56,846 ஆண் வாக்காளர்களும், 7,81,436 பெண் வாக்காளர்களும், 69 மூன்றாம் பாலினத்தவர்களும் உள்ளனர்.
    
வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை:


மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் சீர்காழி சட்டமன்ற தொகுதியில் 288 வாக்குசாவடிகளும், மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் 266 வாக்குசாவடிகளும், பூம்புகார் சட்டமன்ற தொகுதியில் 306 வாக்குசாவடிகளும், திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் 293 வாக்குசாவடிகளும், கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் 289 வாக்குசாவடிகளும், பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் 301 வாக்குசாவடிகளும் ஆக மொத்தம் 1743 வாக்குசாவடிகள் உள்ளன. 




பதட்டமான வாக்குசாவடிகள்:


தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தொடர்புடைய அனைத்துதுறை அலுவலர்களும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் 50 பதற்றமான வாக்குசாவடிகளும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 39 பதற்றமான வாக்குசாவடிகளும் என மொத்தம் 89 வாக்குசாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாக்குசாவடிகளுக்கு  கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்த வாக்குசாவடிகளுக்கு  நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். வாக்குசாவடிகளில் வெப்கேமரா பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும். 


தேர்தல் தொடர்பான நடத்தை விதிகள்:


மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து படைக்கலன்களும் அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படை செய்திட வேண்டும். தேர்தல் நடத்தைவிதிகள் நடைமுறைகள் வந்துள்ள நிலையில் அரசியல் கட்சியினரால் மேற்கொள்ளப்பட்டுள்ள அனுமதியற்ற சுவர் விளம்பரங்கள், பிளக்ஸ் மற்றும் பேனர்கள் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் விளம்பரங்கள், அனுமதியின்றி ஏற்படுத்தப்பட்ட தனிநபருக்கு சொந்தமான இடங்களில் உள்ள விளம்பரங்கள் அகற்றப்படாத நிலையில் உள்ளதை உடன் அகற்றி அதற்கான செலவீனம் தொடர்புடைய அரசியல் கட்சியினரிடமிருந்து வசூலிக்கப்படும். 


தேர்தல் பணி ஊழியர்கள்:


மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்தலை எதிர்கொள்ள ஏதுவாக வாக்குப்பதிவு அலுவலர்கள் 5000 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பணியில் ஈடுப்படுத்தப்பட உள்ளனர். மத்தியஅரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை சேர்ந்த 60 அலுவலர்கள் நுண்பார்வையாளர்களாக நியமிக்கப்பட உள்ளனர். சட்டம் ஒழுங்கு பணிகளை மேற்கொள்ள ஏதுவாக மாவட்டத்தில் 85 மண்டல அலுவலர்கள் மற்றும் காவல்துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  சுதந்திரமான நியாயமான தேர்தல்கள் நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டமன்ற தொகுதிகளுக்கு 3 குழுக்கள் வீதம் 9 பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழுக்கள் வாக்காளர்களுக்கு பணம் அளித்தல், இலவசங்கள் வழங்குதல், மதுபானங்கள் அளித்தல் , சட்டத்திற்கு புறம்பாக மது, போதை பொருட்களை கொண்டு வருதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளும்.


பணம் உச்ச வரம்பு:


50 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட ரொக்கம் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டால் பறிமுதல் செய்யப்படும். அதேபோன்று 10 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட பரிசுபொருட்கள் எடுத்துச்செல்ல கூடாது. வங்கிபரிவத்தனைகள், ஆன்லைன் பரிவர்த்தனைகள் உள்ளிட்டவையும் கண்காணிக்கப்படும். வேட்பாளர்கள் கூட்டம், அரசியல்கட்சியினர் கூட்டம் , பேரணி போன்றவற்றினை உரிய அனுமதிபெற்று அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நடத்த வேண்டும். 


தேர்தல் தொடர்பான கருவிகள் :


மயிலாடுதுறை மாவட்டத்தில் தேர்தலை எதிர்கொள்ள ஏதுவாக 2013 வாக்குப்பதிவு கருவி (பேலட் யூனிட்) 1148 கட்டுப்பாட்டு கருவி (கன்ட்ரோல் யூனிட்) மற்றும் 1204 ஒப்புகை சீட்டு இயந்திரம் (விவிபேட்) ஆகியவை உரிய சோதனைகள் முடிக்கப்பட்டு  தயார் நிலையில் உள்ளது. தேர்தல் தொடர்பாக புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏதுவாக மயிலாடுதுறை மாவட்டத்தில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் அல்லது அரசியல் கட்சியினர் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக எந்நேரமும் 1800-425-8970 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். எனவே மயிலாடுதுறை பாராளுமன்றதொகுதி தேர்தலை சுதந்திரமான, நியாயமான முறையில் நடத்திட அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்தார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.மீனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) செல்வம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துவடிவேல்,தனி வட்டாட்சியர் (தேர்தல்) விஜயராகவன் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.