INDIA Alliance Meeting: டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டம் நிறைவு பெற்றுள்ளது. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஆட்சி அமைக்க இந்தியா கூட்டணி முயற்சி எடுக்குமா என கேள்வி எழுந்துள்ளது.


இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அரசியலமைப்பின் மீது உறுதி கொண்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இந்தியா கூட்டணியில் இணையலாம் என அவர் கூறியுள்ளார்.


கூட்டத்தில் பேசியவற்றை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட காங்கிரஸ் தலைவர், "இந்தியா கூட்டணி தலைவர்கள் அனைவரையும் நான் வரவேற்கிறேன். நாம் நன்றாகப் போராடினோம், ஒற்றுமையாகப் போராடினோம், உறுதியாகப் போராடினோம்.


மோடிக்கு எதிராகவும், அவரது அரசியலுக்கு எதிராகவும் அவர் பாணிக்கு எதிராகவும் மக்கள் தீர்க்கமாக வாக்களித்துள்ளனர். அவர் தார்மீக தோல்வி அடைந்துள்ளார் என்பது தெளிவாகிறது. அதோடு, தனிப்பட்ட முறையில் அவருக்கு ஒரு பெரிய அரசியல் இழப்பு.


 






இருப்பினும், மக்களின் விருப்பத்தைத் தகர்ப்பதில் உறுதியாக இருக்கிறார். நமது அரசியலமைப்பின் அடிப்படை விழுமியங்கள், அதில் குறிப்பிடப்பட்டுள்ள பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நீதிக்கான அர்ப்பணிப்பைப் பகிர்ந்து கொள்ளும் அனைத்துக் கட்சிகளையும் இந்தியக் கூட்டணி வரவேற்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.


கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை கூட்டறிக்கையாக வெளியிட்ட கார்கே, "இந்தியா கூட்டணிக்கு கிடைத்த அமோக ஆதரவிற்கு இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். பாஜகவுக்கும், அவர்களின் வெறுப்பு அரசியலுக்கும், ஊழலுக்கும் பணமதிப்பிழப்பு அரசியலுக்கும் மக்களின் முடிவு தகுந்த பதிலை தந்துள்ளது.


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்காக மக்கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் குரோனி முதலாளித்துவத்துக்கு எதிராகவும், ஜனநாயகத்தைக் காப்பாற்றவும் மக்கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.


மோடி தலைமையிலான பாஜகவின் பாசிச ஆட்சிக்கு எதிராக பாஜக தொடர்ந்து போராடும். பாஜக ஆட்சி அமையக்கூடாது என்ற மக்களின் விருப்பத்தை உணர்ந்து உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுப்போம். மக்களுக்கு என்ன வாக்குறுதி அளித்தாலும் அதை நிறைவேற்றுவோம் என்பதே எங்களது முடிவு" என தெரிவித்துள்ளார்.