மக்களின் தீர்ப்புக்கு எதிராக செயல்பட டெல்லி முயற்சிக்கிறது - CPM பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி பேட்டி !
தமிழக அரசியல் நிலைமை: தனிப்பெரும் கட்சியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் – எம்.ஏ. பேபி.

எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம், ஒரு கட்சி அல்லது கூட்டணியின் பெரும்பான்மை சட்டமன்ற தளத்திலேயே நிரூபிக்கப்பட வேண்டும் என்று தெளிவாக கூறியுள்ளது.
எம்.ஏ. பேபி செய்தியாளர் சந்திப்பு
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எந்த ஒரு கட்சிக்கும் தெளிவான பெரும்பான்மையை வழங்காத நிலையில், ஜனநாயக மரபுகளின்படி தனிப்பெரும் கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது..," தமிழகத்தில் ஆட்சியில் இருந்த திமுக கூட்டணி தோல்வியடைந்ததுடன், எதிர்க்கட்சிகளாக இருந்த அதிமுக மற்றும் பாஜக கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த சூழலில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளதாலும், பெரும்பான்மைக்கு 11 இடங்கள் குறைவாக உள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் அரசியல் மரபுகளின்படி, தனிப்பெரும் கட்சியையோ அல்லது தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியையோ ஆட்சி அமைக்க அழைப்பது ஆளுநரின் கடமை. ஆனால், தமிழக ஆளுநர் விஜய் எவ்வாறு பெரும்பான்மையை நிரூபிப்பார் என்று கேள்வி எழுப்புவது முறையற்றது. 1990-களில் வாஜ்பாய் தலைமையிலான பாஜக பெரும்பான்மை இல்லாதபோதும், தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் அவரை பிரதமராக அழைத்தது ஒரு முக்கிய முன்னுதாரணம். பின்னர் அவர் பதவி விலகிய சம்பவம் ‘13 நாள் அதிசயம்’ என அறியப்பட்டது. மேலும், எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றம், ஒரு கட்சி அல்லது கூட்டணியின் பெரும்பான்மை சட்டமன்ற தளத்திலேயே நிரூபிக்கப்பட வேண்டும் என்று தெளிவாக கூறியுள்ளது.
கொள்கயையை தமிழக ஆளுநர் பின்பற்றவில்லை
இந்த நன்கு நிறுவப்பட்ட கொள்கையை தமிழக ஆளுநர் பின்பற்றவில்லை என்பது வருத்தத்திற்குரியது. இதற்கு எதிராக சிபிஐ(எம்) கட்சி தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. தமிழக மக்களின் தேர்தல் தீர்ப்பை மாற்ற முயற்சிகள் நடைபெறுவதாகவும், பாஜக ஆதரவு கொண்ட அரசை அமைக்க முயற்சி நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, சிபிஐ(எம்) கட்சி தனது மாநில செயற்குழு மற்றும் மாநிலக் குழுவுடன் ஆலோசித்து, தனிப்பெரும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், சிபிஐ(எம்) சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்க தயாராக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குதிரை பேரம்
இந்த முடிவு கட்சியின் அரசியல் தலைமைக்குழுவுடன் ஆலோசித்தே எடுக்கப்பட்டதாகவும், திமுக தலைமையிடமும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார். மேலும், குதிரை பேரம் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது. அதுகுறித்து தகவல் இல்லை என தெரிவித்த அவர், இத்தகைய விவாதங்கள் எழுவதற்குக் காரணமே ஆளுநரின் செயல்பாடே என விமர்சித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பில் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டு குழு தலைவர் ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாநகர் மாவட்ட செயலாளர் மா. கணேஷ், மாநில குழு உறுப்பினர்கள் இரா. விஜயராஜன், எஸ். பாலா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Before You Go
தவெகவின் இளம் MLA அமைச்சராக சிவகாசி கீர்த்தனா இவர் யார் தெரியுமா? | TVK Young Minister Keerthana
ட்ரெண்டிங் செய்திகள்



















