மூன்று வருட திமுக ஆட்சியில் அம்மா திருமண மண்டபத்தை வேளாண்மை கல்லூரியாக மாற்றியதுதான் ஒரே சாதனை என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.
கரூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரும் கரூர் மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் வேம்பு மாரியம்மன் கோவில் தெருவேம்பு மாரியம்மன் கோவில் தெரு, முருகநாதபுரம், நீலிமேடு, ஐந்து ரோடு ஆகிய பகுதிகளில் இறுதிக்கட்ட தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். முன்னதாக வேம்பு மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பின்னர் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பளித்தனர்.
கரூர் வேம்பு மாரியம்மன் கோவில் அருகில் வேட்பாளர் தங்கவேலுவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வாக்கு சேகரித்து பேசுகையில், “திமுக ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கரூர் மாவட்டத்திற்கு செய்த சாதனைகள் என்ன ஒரே ஒரு சாதனை வேளாண்மை கல்லூரியை திருமண மண்டபத்தில் நடத்துகின்ற ஒரே மாவட்டம் இந்த கரூர் மாவட்டம் தான். வேளாண்மை கல்லூரி என்பது கல்லூரியில் படித்துக் கொண்டு விவசாயம் சம்பந்தமான பயிற்சிகள் அளிக்க வேண்டும்.
உழவர் சந்தைக்கு அருகில் அதிமுக ஆட்சியில் அம்மா திருமண மண்டபம் கட்டிய நிலையில் அதனை வேளாண்மை கல்லூரி ஆக மாற்றி மாணவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் விவசாயத்தைப் பற்றி என்ன படிப்பார்கள் மாணவர்கள் வாழ்க்கையில் விளையாடும் திமுக அரசு. இதுதான் இந்த ஆட்சிக்கு சான்று இந்தியாவிலேயே மூன்று வருடத்தில் தமிழகத்தில் ரூ.3.5 லட்சம் கோடி கடன் வாங்கியது தான் திமுக அரசின் சாதனை” என்றார்.