மக்களவை தேர்தல் பரப்புரைக்காக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகை தருகிறார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. 


நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. எங்கு திரும்பினாலும் அரசியல் கட்சியினர் கூட்டம் கூட்டமாக வாக்கு சேகரித்து செல்லும் காட்சிகளை காணலாம். இதுவரை நம் ஊரை எட்டிக்கூட பார்க்காத அரசியல் பிரமுகர்கள் நம்மை தேடி வந்து வாக்கு கேட்கும் ஆச்சரிய காட்சிகளும் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்குகிறது. ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக இந்தியா முழுமைக்கும் தேர்தல் நடைபெறும் நிலையில் ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றது. 


இதில் 40 தொகுதிகளை கொண்ட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாளை மறுநாள் (ஏப்ரல் 17) பரப்புரை ஓயவுள்ள நிலையில் தேசிய தலைவர்கள் எல்லாம் தமிழ்நாட்டுக்கு வருகை தந்து வாக்குகள் சேகரித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி இன்று மீண்டும் தமிழ்நாடு வருகை தரவுள்ளார். ஏற்கனவே சென்னை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். 


இதனிடையே 2024 ஆம் ஆண்டில் 8வது முறையாக தமிழ்நாடு வருகை தரும் அவர் இம்முறை தென்மாவட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க உள்ளார். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உள்ள அகஸ்தியர்பட்டியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர், திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி பாஜக வேட்பாளர் பொன் ராதா கிருஷ்ணன், தூத்துக்குடி தமாக வேட்பாளர் எஸ்டிஆர் விஜயசீலன், தென்காசி வேட்பாளர் ஜான் பாண்டியன் ஆகியோருக்கு ஆதரவாக வாக்கு கேட்கிறார். 


இதற்காக திருவனந்தபுரத்துக்கு விமானம் மூலம் வரும் பிரதமர் மோடி பின்னர் அங்கிருந்து மாலை 4.10 மணியளவில் ஹெலிகாப்டரில் அகஸ்தியர்பட்டிக்கு வருகை தருகிறார். அங்கு பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் அவர் மீண்டும் ஹெலிகாப்டரில் மதுரை செல்லவுள்ளார். இதற்கிடையில் அகஸ்தியர் பட்டியை சுற்றியுள்ள 5 கிலோ மீட்டர் பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளது. அப்பகுதியில் 2 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதோடு போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. 


மேலும் 4 தொகுதியைச் சேர்ந்த பாஜக மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களும் வருகை தருவார்கள் என்பதால் ஆங்காங்கே வாகன நிறுத்தமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.