Lok Sabha Elections 2024: நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் முதற்கட்டத்தில், யார் மிகப்பெரும் பணக்கார வேட்பாளர் என்ற தகவல் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.


நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டம்:


நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் நாடு முழுவதும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி, அருணாச்சலபிரதேசத்தில் 2 தொகுதிகள், பிகாரில் 4, சத்தீஸ்கரில் ஒன்று, மத்திய பிரதேசத்தில் 6, மகாராஷ்டிரா 5, மணிப்பூர் மற்றும் மேகாலயா 2, ராஜஸ்தான் 12, உத்தரபிரதேசம் 8, உத்தராகண்ட் 5, மேற்குவங்கம் 3 மற்றும் மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா, அந்தமான் நிகோபார் தீவுகள், ஜம்மு & காஷ்மீர், லட்சத்தீவுகள் ஆகிய மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த தலா ஒரு மக்களவை தொகுதி என, மொத்தம் 102 தொகுதிகளில் இன்று தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  


கோடீஸ்வர வேட்பாளர்கள்:


முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள 102 தொகுதிகளில், தேசிய மற்றும் மாநில கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 1618 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் 28 சதவிகிதம் அல்லது 10ல் மூன்று பேர் தங்களுக்கு ஒரு கோடிக்கும் அதிகமாக சொத்து இருப்பதாக வேட்புமனுதாக்கலில் தெரிவித்துள்ளனர். அதன்படி, 450 பேர் கோடிஸ்வர வேட்பாளர்களாக உள்ளனர். அவர்களில் 193 பேர் 5 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துமதிப்பினை கொண்டுள்ளனர். 139 பேர் 2 முதல் 5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை கொண்டுள்ளனர். 


கட்சி வாரியாக கோடீஸ்வர வேட்பாளர்கள்:


ராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் போட்டியிடும் 4 வேட்பாளர்களும் கோடீஸ்வரர்கள் தான். அதிமுகவின் 36 வேட்பாளர்களில் 35 பேரும், திமுக வேட்பாளர்கள் 22 பேரில் 21 பேரும், பாஜகவின் 77 வேட்பளர்களில் 69 பேரும், காங்கிரஸின் 56 வேட்பாளர்களில் 49 பேரும், திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்த 5 வேட்பாளர்களில் 4 பேரும், பகுஜன் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த 86 வேட்பாளர்களில் 18 பேரும் கோடீஸ்வரர்களாக உள்ளனர். இந்த தகவல்கள் அனைத்தும் வேட்பாளர்களின் வேட்புமனுவில் இருந்ததன் அடிப்படையில் தெரிவிக்கப்படுகிறது. 


பணக்கார வேட்பாளர்கள்:



  • மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரே காங்கிரஸ் எம்.பி.யான நகுல் நாத், அக்கட்சி சார்ப்ல் மீண்டும் சிந்த்வாரா தொகுதியில்  போட்டியிடுகிறார். அவரது சொத்து மதிப்பு ரூ. 717 கோடி எனவும், அதில் ரூ.668 கோடி மதிப்பிலானாவை அசையும் சொத்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் முதற்கட்ட தேர்தலில் பணக்கார வேட்பாளர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.

  • தமிழகத்தின் ஈரோட்டில் போட்டியிடும் அதிமுகவின் அசோக்குமார் ரூ.662 கோடி மதிப்பிலான சொத்துகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

  • சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவ் ரூ.304 கோடி மதிப்பிலான சொத்துகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.



வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு:


முதற்கட்ட தேர்தலில் களத்தில் உள்ள மொத்த வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு, ரூ.4.51 கோடியாகும். பிரதான கட்சிகளை பொறுத்தவரையில், அதிமுக வேட்பாளர்கள் 36 பேரின் சராசரி சொத்து மதிப்பு ரூ.35.61 கோடியாகவும், திமுக வேட்பாளர்கள் 22 பேரின் சராசரி சொத்து மதிப்பு ரூ.31.22 கோடியாகவும் உள்ளது. காங்கிரஸ் கட்சியின் 56 வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ. 27.79 கோடியாகவும், பாஜகவின் 77  வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.22.37 கோடி ஆகவும் உள்ளது. ராஸ்டிரிய ஜனதா தளம் வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.8.93 கோடியாகவும், சமாஜ்வாதி கட்சியின் 7 வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.6.67 கோடியாகவும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஐந்து வேட்பாளர்களின் சராசரி சொத்து ரூ.3.72 கோடி ஆகவும் உள்ளது.