நாமக்கலில் வாகனப் பேரணியில் ஈடுபட்டு பாஜகவுக்கு வாக்கு சேகரித்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வேட்பாளர் பெயரை மாற்றி சொன்னதால் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
மக்களவை தேர்தல் 2024
2024 ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி ஜூன் 1 ஆம் தேதி நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி ஒட்டுமொத்தமாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் தேர்தல் திருவிழா இந்தியா முழுவதும் களைக்கட்டியுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கவுள்ள நிலையில் தேசிய, மாநில கட்சியினர் தீவிரமாகவும், விதவிதமாகவும் மக்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
2021 சட்டமன்ற தேர்தலில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜக, இம்முறை மக்களவை தேர்தலில் வெற்றியை குறிவைத்து களம் கண்டுள்ளது. இதனால் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா என அடுத்தடுத்து தேசிய தலைவர்கள் எல்லாம் தமிழ்நாட்டுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
ராஜ்நாத் சிங் பரப்புரை
இப்படியான நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கத்தை ஆதரித்து வாகன பேரணியில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தார்.
அப்போது பொதுமக்கள் மற்றும் தொண்டர்களிடையே பேசிய அவர், “இந்தியாவின் நிலை உலகளவில் சில ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்தது என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். பிரதமர் மோடியின் ஆட்சியில் அது எவ்வாறு மாறியிருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணியை கண்டு பயப்படாமல் தேசிய ஜனநாயக கூட்டணி செயல்படுவோம். வரும் தேர்தலில் 400 இடங்களை கைப்பற்றுவது நமது இலக்காகும். மத்தியில் ஆளும் பாஜக அரசு மக்களுக்கான திட்டங்களை சொன்ன வகையிலும், சொல்லாமலும் செய்து வருகிறது.
திமுக, காங்கிரஸ் கட்சிகளைப் பொறுத்தவரை அக்கட்சி தங்கள் குடும்பத்தினருக்காக அரசியல் செய்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பிரதமர் மோடி நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டு கொண்டிருக்கிறார். அவருக்கான கரத்தை வலுப்படுத்தும் வகையில் மக்கள் வரும் மக்களவை தேர்தலில் பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கத்தை ஆதரிக்க வேண்டும்” என பேசினார். இந்நிலையில் பாஜக வேட்பாளர் கே.பி.ராமலிங்கம் பெயரை ரங்கராஜன் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மாற்றி சொன்னதால் தொண்டர்கள் ஷாக் ஆனார்கள். பின்னர் சுற்றியிருந்த நிர்வாகிகள் தவறை சுட்டிக்காட்டியதும் கே.பி.ராமலிங்கம் என அவர் சரியாக சொன்னார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.