கூட்டணி வேட்பாளரான பாஜகவை சேர்ந்த நயினார் நாகேந்திரனை ஆதரித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நாங்குநேரியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ”பிரதமர் மோடி கடந்த  10 ஆண்டுகளாக இந்தியாவில் ஒரு சிறந்த ஆட்சியை மக்கள் விரும்புகிற ஆட்சியை இந்தியாவின் தரம் இன்று உலக  நாடுகளால் உற்று நோக்கப்படுகின்ற அளவிற்கு பாராட்டப்படும் அளவிற்கு ஒரு ஆட்சியை கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.


ஊழலற்ற ஆட்சி, அதுபோல பொருளாதார நெருக்கடியில் பல நாடுகள் தத்தளித்துக்கொண்டிருக்கும் போதும், ஏன் வளர்ந்த  நாடுகளே தத்தளித்துக்கொண்டிருக்கும்போது இந்தியாவின் பொருளாதாரத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் அரசாங்கம் மத்திய அரசாங்கம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எப்படி சட்டம் ஒழுங்கை பாதுகாத்தாரோ, அதுபோல இன்று இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு ஆட்சியை  நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து 3 வது முறையாக மோடி இந்தியாவின் பிரதமராக வர இருக்கிறார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல எல்லோருக்கும் தெரியும்.


2024 தேர்தலில்  தமிழ்நாட்டில் NDA கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை கொடுப்பதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளாக சிறப்பாக செயலாற்றி கொண்டிருக்கும் மோடிக்கு சிறப்பை சேர்க்கும் வகையில் தமிழ்நாட்டிற்கு பல வளர்ச்சி திட்டங்களை  கொடுத்து இந்தியா சிறந்த மாநிலமாக விளங்குவதற்கு நீங்கள் வாக்களிக்கும் சின்னம் தாமரை” என வாக்கு சேகரித்தார்.


அதனை தொடர்ந்து தாழையூத்து பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட டிடிவி தினகரன் மக்கள் மத்தியில் பேசும் பொழுது, ”பொருளாதாரத்தில் படு பாதாளத்தில் கிடந்த இந்தியாவை 2014 இல் இருந்து 2019 வரை 5 ஆண்டுகளில் முதல் 10 இடங்களுக்குள் கொண்டு வந்து சாதனை படைத்தவர் பிரதமர் மோடி. அதுபோல 2019 முதல் 2024க்குள் முதல் 5 இடங்களில் பொருளாதாரத்தில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. அடுத்த 5 ஆண்டுகளில் 3வது இடத்திற்கு உலக  அளவிலே உறுதியாக உயர்த்திக் காட்டுவார்.


அதற்கு வாய்ப்பளிக்கும் விதமாக 3வது முறையாக பிரதமராக வர இருக்கிற மோடியின் கரங்களை வழிப்படுத்தும் விதமாக திருநெல்வேலி வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யவேண்டும். 2019 தேர்தலில் போது பாஜக அறுதிப் பெரும்பான்மை பெற்று மோடி பிரதமரான போது தமிழ்நாட்டில் இருந்து ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தான் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அன்று தேர்வு செய்யப்பட்டார். ஆனால் இன்று இந்த கூட்டணி திமுகவின் ஊழல் கூட்டணிக்கு எதிராக பலமான கூட்டணியாக அமைந்திருக்கிறது.  12 கட்சிகள் இன்று இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. இந்த கட்சியின் தலைவர்கள் துணிச்சலுடன் உறுதியாக போட்டியிடுகிறார்கள். 


கோவையில் அண்ணாமலையும், நெல்லையில் நயினார் நாகேந்திரனும், தமிழிசை தென்சென்னையிலும், எல்.முருகன் நீலகிரியிலும், ஓபிஎஸ் சுயேச்சையாக  இராமநாதபுரத்திலும், நான் தேனியிலும், ஜான்பாண்டியன் தென்காசியிலும், பொன்ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரியிலும், பாரிவேந்தர் பெரம்பலூரிலும் என கூட்டணியின் முக்கிய தலைவர்கள் போட்டியிடுகின்றனர். ஆனால் இரட்டை இலையை அபகரித்து வைத்திருக்கும் பழனிசாமி கும்பலில் முன்னாள் அமைச்சரோ, முக்கிய தலைவர்களோ இந்த தேர்தலில் போட்டியிட தயாராக இருக்கிறார்களா?” என விமர்சித்தார்.


தொடர்ந்து பேசிய அவர், ”இரட்டை இலை இன்று எங்களிடம் இருக்கிறது, அம்மாவின் தொண்டர்கள் எங்களோடு இருக்கிறார்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் பழனிசாமி துரோக கும்பல் இந்த தேர்தலில் தைரியமாக போட்டியிட அவர்களுக்கு துணிச்சல் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாட்டில் இந்த முறை தேர்தலில் வெற்றி முத்திரையை பதிக்க  இருக்கிறது என்பதை பறைசாற்றும் விதமாக போட்டியிடுகின்றனர். 2019 இல் தமிழ்நாட்டில் மக்கள் விரோத பழனிசாமியின் ஊழல் ஆட்சி நடைபெற்றது. அதனால் திமுக காங்கிரஸ் கூட்டணி தமிழக மக்களை திசை திருப்பி வெற்றி பெற்றனர். இப்பொழுது ஆட்சி செய்யும் திமுக 3 ஆண்டுகளில் தேர்தல் வாக்குறுதிகளை கூட நிறைவேற்ற முடியாத போதை மருந்து கலாச்சாரம் பரவி இருக்கும் அளவிற்கு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் அளவிற்கு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருப்பதற்கு காரணம்  திருந்தவே திருந்தாத திமுகவின் ஊழல் ஆட்சி என்பது தான்.  இந்தியா இதற்கு முன்பு உலக நாடுகளெல்லாம் கண்டு கொள்ள தவறிய நாடாக இருந்தது. ஆனால் இன்று அமெரிக்கா, சீனா போன்ற வல்லரசுகளும் இந்தியாவை வியந்து பாராட்டும் விதமாக தங்கள் நாட்டிற்கு மோடி வர வேண்டும் என்னும் விதமாக இந்தியாவை உலகத்தில் முக்கியமான நாடாக உயர்த்திய பெருமை மோடியையே சேரும்” என்று பேசினார்.