திமுக மீது கடுமையான விமர்சனம் வைத்த டிடிவி:


தமிழகத்தில் போதை கலாச்சாரம் தலைவிரித்து ஆடுகிறது. விடியாமூஞ்சி அரசு ஆட்சிக்கு வந்தது முதல் தமிழகத்திற்கு விடிவே இல்லாமல் போய்விட்டது. சின்ன ஸ்டாலின் கூறியது போல்  ஸ்டாலின் ஒரே கையெழுத்தில் நீட்டை ரத்து செய்வதாக கூறினார். ஒரு கோடி கையெழுத்து வாங்கி குப்பையில் தான் போடப்பட்டுள்ளது. துரோகி எடப்பாடியால் சீரழிந்த தமிழக அரசு இன்று மேலும் சீரழிந்து கொண்டிருக்கிறது என போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதி சுற்றுப்பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட டிடிவி தினகரன் திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்தார்.




டிடிவி பரப்புரை:


தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் தேனி பாராளுமன்ற தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளருமான டிடிவி தினகரன் நேற்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். போடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோடாங்கிபட்டியில் தொடங்கி போடிநாயக்கனூர் பேருந்து நிலையம் அருகிலும் தர்மத்துப்பட்டி, சிலமலை, ராசிங்கபுரம், சங்கராபுரம், சுற்றுப்பகுதிகளிலும்  தனது பரப்புரையை மேற்கொண்டார்.




எடிப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்த டிடிவி:


தனது பரப்புரையில் திமுக ஆட்சியையும் எடப்பாடியையும் கடுமையாக சாடினார். புரட்சித்தலைவி  அம்மாவால் அரசியலுக்கு வந்த நான் அம்மாவின் ஆதரவால் எத்தனையோ பதவிகளை பெற்றிருக்க முடியும். ஆனால் நீண்ட காலத்திற்கு பின்பு இப்போது எனது அரசியல் வாழ்க்கையின் தொடக்கமான நாடாளுமன்ற தொகுதி பகுதி பகுதிகளுக்கு வந்துள்ளேன் என்று கூறியவர், தமிழகத்தில் போதை கலாச்சாரம் சீரழிந்து வருவதாக கூறினர். மேலும் உதயநிதியை சின்ன ஸ்டாலின் என்று கூறிய டிடிவி தினகரன் சின்ன ஸ்டாலின் நீட் தேர்வை ஒரே கையெழுத்தில் ரத்து செய்வதாக கூறி பொய்யான வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தார். ஆனால் ஒரு கோடி கையெழுத்து வாங்கியும் நீட் தேர்வு ரத்து செய்ய முடியாமல் குப்பையில் போடப்பட்டுள்ளது என்று கூறினார்.




தமிழகத்தில் விடிவு காலம் பிறக்குமா டிடிவி கேள்வி:


எடப்பாடியின் ஊழல் ஆட்சி மீது கொண்ட அதிருப்தியால் மக்கள் திமுக இனியாவது திருந்தும் என்று நம்பி இனியாவது ஒரு விடிவு காலம் பிறக்கும் என்று நம்பி திமுகவுக்கு வாக்களித்தார்கள். ஆனால் இந்த விடியா மூஞ்சி அரசு ஆட்சிக்கு வந்தது முதல் தமிழகத்திற்கு விடிவு காலம் இல்லாமல் போய்விட்டது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை, போதைப் பழக்கத்தால் தமிழ்நாடு சீரழிந்து கிடக்கிறது என்று கூறிய அவர் தற்போது நடக்கும் பாராளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது போதாது எனவும் தமிழகம் முழுவதும் 39 தொகுதிகளில் வெற்றி பெற்று மோடியை மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமராக அமரச் செய்வோம் என்று கூறினார். அம்மா வழியில் ஆர் கே நகர் பகுதியில் குக்கர் சின்னத்தில் அன்று போட்டியிட்டு திமுக வேட்பாளரை டெபாசிட் இழக்கச் செய்தேன். அதேபோல இங்கும் அமோக வெற்றி பெறுவதற்கு ஒரு குக்கர் சின்னத்தில் வாக்களியுங்கள் என்று கூறி தனது பரப்புரையை மேற்கொண்டார்.