திருச்சி நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை உயர்தட்டு மக்கள், நடுத்தர வர்க்கம், ஏழைகள் என பலதரப்பட்ட மக்களை கொண்டுள்ள தொகுதியாக  திகழ்கிறது. திருச்சி தமிழ்நாட்டின் இதய பகுதியாகவும் மைய பகுதியாகவும் உள்ளது.


தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்துள்ள 2024 மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதியில் மொத்தம் 67.52 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.


இங்கு திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ, அதிமுக சார்பில் கருப்பையா , பாஜக கூட்டணியில் அமமுகவை சார்ந்த செந்தில் நாதன், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜல்லிக்கட்டு ஆர்வலர் ராஜேஷ் போட்டியிட்டுள்ளனர்.




திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு.. 


திமுக கூட்டணியில் போட்டியிட்ட மதிமுக துரை வைகோ திருச்சி பாராளுமன்ற தொகுதியில் சூறாவளியாக தொகுதியை வலம் வந்து வாக்கு சேகரித்தார். இவரை ஆதரித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர்களும் தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இவருக்கு ஆதரவாக தொகுதி முழுவதும் வலம் வந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தனர்.


திமுக கூட்டணி வேட்பாளரின் பிரச்சாரம் ஒரு பக்கம் சூடு பிடித்தாலும், பாஜக கூட்டணியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் செந்தில் நாதனை ஆதரித்து பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா உறையூர் பகுதியில் ரோடு ஷோ நிகழ்ச்சி மூலமாக பொதுமக்களை சந்தித்தும் வாக்கு சேகரித்தார். பாஜக தலைவர் அண்ணாமலை செந்தில் நாதனுக்கு ஆதரவாக தென்னூர் பகுதியில் திறந்த வேன் மூலம் பிரச்சாரம் செய்தார்.




அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி நவலூர் குட்டபட்டு மற்றும் தென்னூர் உழவர் சந்தை மைதானம் ஆகிய பகுதிகளிலும், கூட்டணியில் அங்கம் வகித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்தனர். 


முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வேட்பாளர் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே இறுதி நாட்கள் வரை கருப்பையாவிற்கு நிழலாக செயல்பட்டு தொகுதி முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார் .


திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மதிமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி நிலவியது .


திருச்சி பாராளுமன்ற தொகுதியை கைப்பற்றி வெற்றி வாகைச் சூடப் போவது யார் என்பது நாளை ஜூன் 4 ஆம் தேதி தெரிந்துவிடும்.




திருச்சி தொகுதியில் கடந்த முறை வெற்றி பெற்றவர்கள்..


திருச்சி தொகுதியில் கடந்த 2019 தேர்தலில் மொத்தம் 68.89 சதவீத வாக்குகள் பதிவாகின.


இவற்றில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கிய திருநாவுக்கரசர் 59.28 சதவீதம் வாக்குகளை (6,21,285 வாக்குகள்) பெற்றார் . சுமார் 4,59,286  லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவருக்கு அடுத்ததாக தேமுதிக வேட்பாளர் மருத்துவர் இளங்கோவன் 15.46 சதவீத வாக்குகளை (1,61,999 வாக்குகள் ) பெற்றார். 


அமமுக கட்சி வேட்பாளரான சாருபாலா தொண்டைமான் 9.62 சதவீதம் 1,00,818 வாக்குகளை பெற்றார் மற்றும் நாம் தமிழர் கட்சியில் போட்டியிட்ட வினோத் 6.23 சதவீதம்‌ 65,286 வாக்குகளை பெற்றனர்.




திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வாக்காளர்கள் மற்றும் பதிவான வாக்கு விபவரம்


திருச்சி தொகுதியில் 7,57,130 ஆண் வாக்காளர்களும், 7,96,616 பெண் வாக்காளர்களும் 239 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 15,53,985 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 5,12,264 ஆண் வாக்காளர்களும், 5,36,844 பெண் வாக்காளர்களும் , 102 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 10,49,210 பேர் வாக்களித்தனர். ஆண் வாக்காளர்கள் 67.66 சதவீதமும், பெண் வாக்காளர்கள் 67.39 சதவீதமும், மூன்றாம் பாலினத்தவர்கள் 42.68 சதவீதமும் என மொத்தம் 67.52 சதவீதம் வாக்குகள் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் பதிவாகியுள்ளது. 




திருச்சி தொகுதியில் அதிமுக - மதிமுக இடையே கடுமையான போட்டி 


2019 ல் நடைபெற்ற தேர்தலின் போது அதிமுக ஆளுங் கட்சியாக இருந்தது. அதிமுக மீது தமிழக வாக்காளர்கள் மத்தியில் பரவலாக இருந்த அதிருப்தியும், பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததும், திமுக கூட்டணி வெற்றிப் பெற முக்கிய காரணியாக இருந்தது.


ஆகையால் இந்த முறை திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருப்பையாவுக்கும்,  திமுக கூட்டணி கட்சி  வேட்பாளர் துரை வைகோவிற்கும் கடுமையான போட்டி நிழவுகிறது.


இந்த தேர்தலில் அதிமுக தனது இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு உள்ளது. ஆனால் திமுக கூட்டணி இருக்கக்கூடிய மதிமுக சுயேட்சையாக தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்டது. தீப்பெட்டி சின்னம் பொதுமக்களிடையே பெரிய வரவேற்பை பெறவில்லை என்று பலரின் கருத்தாக உள்ளது. ஆகையால் இந்த தேர்தலில் அதிமுக - மதிமுகவிற்கு கடுமையான போட்டி நிலவி வருகிறது.