திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான இந்திய கூட்டணியின் சார்பில், தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூட்டாம்புளி, பொட்டல்காடு, பாத்திமாநகர், வட்டக்கோவில், மேட்டுப்பட்டி, மாதாநகர் சந்திப்பு ஆகிய பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.




அப்போது பேசிய கனிமொழி, ”வரக்கூடிய தேர்தலிலே நாம் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த நாடு எத்தனை போராட்டங்களை தாண்டி, எத்தனை உயிரிழப்புகளைத் தாண்டி ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை அடைந்திருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும். இந்த நாட்டின் விடுதலைப் போரில் எதுவும் செய்யாத கட்சி என்றால் ஆர்.எஸ்.எஸ், பாஜகதான். அவர்களில் சிலர் போராடி கைது செய்யப்பட்டால் கூட மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு வெளியே வந்துவிட்டார்கள். ஆனால் அவர்கள்தான் ஏதோ தேசத்தின் மீது அதிக பற்று வைத்திருப்பவர்கள் மாதிரி பேசுகிறார்கள். இந்த தேசத்தின் மீது அன்பிருந்தால் மக்களை காப்பாற்றியிருக்க வேண்டாமா? என்ன செய்திருக்கிறார் மோடி? எல்லையில் அருணாசலபிரதேசத்தில் உள்ளே வந்த சீனா பல்வேறு கிராமங்களுக்கு பெயர் வைத்துவிட்டது. ஆனால் சீனாவிடம் பேசக் கூட வீரன் நரேந்திர மோடிக்கு தைரியம் இல்லை. சுற்றியிருக்கும் எந்த நாட்டுடனும் மோடிக்கு நல்லுறவு இல்லை. எப்போதும் வெளிநாட்டில்தான் இருப்பார்.




இங்கே தூத்துக்குடியில் மழை வெள்ளம் வந்தபோது மோடி எட்டிப் பார்க்கவில்லை. மணிப்பூரில் பெண்கள் மோசமான வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார்கள். ஒருமுறை மணிப்பூருக்கு சென்று மக்களை சந்தித்து ஒரு ஆறுதல் வார்த்தை சொல்லியிருப்பாரா மோடி? இப்போது தேர்தல் வந்தவுடன் தமிழ்நாட்டையே சுற்றிச் சுற்றி வருகிறார். தடுக்கி விழுந்தால் மோடி மீதுதான் விழணும் என்ற அளவுக்கு வருகிறார். தமிழ்நாட்டுக்கு பிரச்சினை ஏற்பட்டபோதெல்லாம் இங்கே வரவில்லை. நிவாரணம் ஒரு ரூபாய் கூட தரவில்லை. நீங்கள் கேட்கும்போதெல்லாம் கொடுக்க நாங்கள் என்ன ஏ.டி.எம். மெஷினா என்று கேட்டார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். நாம் நமது வரிப்பணத்தைதானே கேட்கிறோம். நாம் ஒரு ரூபாய் கொடுத்தால் நமக்கு திருப்பிக் கொடுப்பது 29 பைசாதான். அதுவும் மற்ற மாநிலங்களுக்கு அவர்கள் கொடுக்கும் வரிப்பணத்தை விட அதிகமாக திருப்பியளிக்கிறீர்கள். ஆனால் தமிழ்நாட்டுக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை? வரவேண்டிய நிதி வராமல் எப்படி சாலைகள் போடுவது, பள்ளிகள், கல்லூரிகள் கட்டுவது? மோடிக்கு சாதாரண மக்கள் பற்றி கவலை அக்கறை இல்லை. அவரது கவலை எல்லாம் அதானி, அம்பானி மீதுதான். கார்ப்பரேட் நிறுவனங்களை உலுக்கினால் காசு வரும். ஊழல் ஊழல் என்று நம்மை சொல்கிறாரே? மோடி என்ன செய்கிறார்? கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 15 லட்சம் கோடி கடன் ரத்து செய்திருக்கிறார். ஆனால் வங்கிகளில் பேலன்ஸ் கம்மியா இருக்கு என்பதற்காக பிடுங்கி சேர்த்த காசு எவ்வளவு தெரியுமா? 21 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு லட்சம் கோடி கடன் தள்ளுபடி.




ஜாதியின் பெயரால் மதத்தின் பெயரால் பிரித்து அரசியல் ஆதாயம் அடைய முயற்சிக்கிறார்கள். நம்முடைய முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். கேஸ் சிலிண்டர் விலை 500 ரூபாய், பெட்ரோல் லிட்டர் 75 ரூபாய், டீசல் 65 ரூபாய், பத்து அடிக்கு ஒரு முறை காசு வாங்கும் டோல் கேட்டுகள் மூடப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். எப்படி கலைஞர் உரிமைத் தொகையை முதலமைச்சர் சொன்னபடி வழங்கினாரோ அதேபோல இதையெல்லாம் செய்வார். அதற்காக எனது இரண்டாம் தாய் வீடான தூத்துக்குடியில் மீண்டும் பணியாற்ற எனக்கு மீண்டு வாய்ப்பு வழங்கிட வேண்டும்” என்றார்.