திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்காக தனது கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து இன்று திருநெல்வேலியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். 


அடுத்த 5 ஆண்டு காலம் இந்தியாவின் பிரதமர் யார் என்பதை தேர்வு செய்ய மக்களவை தேர்தலுக்கான தேதியை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. முதல் கட்டமாக வருகின்ற ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை சந்திக்கும் வகையில் திமுக கட்சி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும், அதிமுக கட்சி தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. அதே நேரத்தில், கடந்த சில தேர்தல்களில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த பாஜக, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பாமகவுடன் கூட்டணி வைத்து தனித்து போட்டியிடுகிறது. 


இந்தநிலையில், தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியான திமுக தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது. அந்த வகையில், திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களாக சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி செல்கிறார். அதன்பிறகு திருநெல்வேலியில் உள்ள நாங்குநேரியில் மாலை 6 மணிக்கு திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்கிறார். இதற்காக திருநெல்வேலியில் உள்ள நாங்குநேரியில் பிரமாண்டமாக மேடை அமைக்கப்பட்டுள்ளது. 


பிரச்சாரம் முடிந்த பின்னர் மீண்டும் திருநெல்வேலியில் இருந்து கார் மூலம் தூத்துக்குடி வந்து அங்கிருக்கும் ரிசார்ட்டில் இரவில் தங்குகிறார். 


திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள்:






கடந்த தேர்தலில் திமுக எப்படி..?


கடந்த 2019 மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமோக வெற்றிபெற்றது. புதுச்சேரியை தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளில் 38 தொகுதிகளை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வென்றது. 


கடந்த 22ம் தேதி திருச்சியில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கட்சியின் திருச்சிராப்பள்ளி வேட்பாளர் ம.தி.மு.க தலைவர் துரை வைகோ மற்றும் அருகிலுள்ள பெரம்பலூரில் திமுகவின் அருண் நேரு ஆகியோருக்கு வாக்குகளை சேகரித்தார். 


வரும் நாட்களில் புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவை தொகுதிகளிலும் மாநிலம் தழுவிய சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார். தனது கட்சியின் தென் சென்னை மற்றும் மத்திய சென்னை வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு வருகின்ற ஏப்ரல் 17ம் தேதி சென்னையில் தனது பிரச்சாரத்தை முடிக்கிறார்.