ஜூன் 9ம் தேதி மாலை 6 மணிக்கு பிரதமராக மோடி பதவியேற்க இருப்பதாக ஏ.என்.ஐ தகவல் தெரிவித்துள்ளது. கூட்டணி கட்சிகள் ஆதரவு கடிதம் அளித்த நிலையில் பிரதமராக மோடி பதவியேற்கிறார். மேலும், ஜூன் 17ல் மக்களவை உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள் என தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வருகின்ற ஜூன் 8ம் தேதி பாஜக கூட்டணி அரசு பதவியேற்கும் என்று தகவல் வெளியாகி இருந்தது.
மோடி பதவியேற்கும் விழாவில் எந்த நாட்டு தலைவர்கள் பங்கேற்பு:
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் இந்த விழாவில் கலந்து கொள்ள உள்ளனர். மேலும், இதில், 8000க்கும் மேற்பட்ட பிரமுகர்கள் மற்றும் பாஜக தொண்டர்கள் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
2014 ஆம் ஆண்டில், சார்க் (தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு சங்கம்) நாடுகளின் தலைவர்கள் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர். அதேபோல், 2019 ஆம் ஆண்டில், BIMSTEC (பல்வேறு துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி) நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மற்ற நாடுகளின் தலைவர்களின் அட்டவணையை மனதில் வைத்து இறுதி தேதி மற்றும் நேரம் தயாரிக்கப்படுவதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. ஞாயிற்றுக்கிழமை மாலைக்குள் பல பிரமுகர்கள் வெளியேற வேண்டியிருந்ததால், இரவுக்கு ராஷ்டிரபதி பவனில் விழாவை நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
இதற்கிடையில், ஆந்திரப் பிரதேச முதலமைச்சராக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு ஜூன் 9ம் தேதி இல்லாமல், ஜூன் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஏனெனில், நாயுடு முதலில் பிரதமர் நரேந்திர மோடியில் பதவியேற்பு விழாவில் பங்கேற்க இருக்கிறார். அதன்பின், நாயுடு பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சந்திரபாபு நாயுடு நாளை (ஜூன் 7ம் தேதி) தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி கூட்டத்திற்காக டெல்லி செல்கிறார். அதன்பின், அப்படியே பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இவருடன் ஜன சேனா கட்சி தலைவர் பவன் கல்யாணும் டெல்லி செல்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல் 2024:
கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை நடைபெற்ற மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. அதில், 294 இடங்களை பிடித்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க இருக்கிறது. முன்னதாக, தேர்தல் முடிந்ததும் வெளியான கருத்துக்கணிப்பில் பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என வெளியானது. அதெல்லாம் பொய் என்று நிரூபிக்கும் வகையில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 232 இடங்களை பிடித்து அசத்தியது.
கடந்த 2014 மற்றும் 2019 மக்களவை தேர்தல்களில் முறையே 283 மற்றும் 303 இடங்களை பிடித்து பாஜக, இந்த 2024 மக்களவை தேர்தலில் வெறும் 240 இடங்களை மட்டுமே பிடித்தது பெரும்பான்மையை இழந்தது. இதையடுத்து, தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் நேற்று பிரதமர் இல்லத்தில் கூடி பிரதமர் மோடியை ஒருமனதாக கூட்டணியின் தலைவராக தேர்வு செய்தனர். மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவி ஏற்கிறார்.