Lok Sabha Polls Phase 6: நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் 6ம் கட்டத்தில் அதிகபட்சமாக மேற்குவங்கத்தில், 79.5 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
6ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு:
மக்களவைத் தேர்தலின் ஆறாவது கட்டத்தில் ஆறு மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் உள்ள, 58 தொகுதிகளில் சனிக்கிழமை வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. இதில் 5.84 கோடி ஆண்கள், 5.29 கோடி பெண்கள், 5,120 மூன்றாம் பாலினத்தவர்கள் என 11.13 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்று இருந்தனர். அவர்களுக்கு ஏதுவாக, 1.14 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, சுமார் 11.4 லட்சம் வாக்குச்சாவடி அலுவலர்கள் நேற்று பணியில் ஈடுபட்டனர். அதன் முடிவில் நேற்று சுமார் 61.2 சதவிகித வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மாநில வாரியான வாக்குப்பதிவு விவரம்:
தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தற்காலிக தகவல்களின்படி, மேற்குவங்க மாநிலத்தின் 8 தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவில், அதிகபட்சமாக 79.5 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. மாநிலத்தில் ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. ஜார்க்கண்டைச் சேர்ந்த நான்கு தொகுதிகளில் சராசரியாக 63.8 சதவிக்தமும், உத்தரப் பிரதேசத்தின் 14 தொகுதிகளில் சராசரியாக 54.03 சதவிகிதமும், ஜம்மு காஷ்மீரில் 54.3 சதவிகிதமும், ஹரியானாவில் 59.61 சதவிகிதமும், குறைந்தபட்சமாக டெல்லியில் 52.9 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக வடமேற்கு டெல்லியில் 56.7 சதவிகிதமும், தெற்கு டெல்லியில் 55.1 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன. கிழக்கு டெல்லியில் 57.8 சதவிகிதம், மேற்கு டெல்லியில் 58.3 சதவிகிதம் மற்றும் சாந்தினி சவுக்கில் 58 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன. அதிகபட்சமக வடகிழக்கு டெல்லியில் அதிகபட்சமாக 62.9 சதவ்கித வாக்குகள் பதிவாகியுள்ளன. பீகாரின் 6 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 42 சட்டமன்ற தொகுதிகளில் சராசரியாக 69.6 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
நட்சத்திர வேட்பாளர்கள்:
6ம் கட்ட வாக்குப்பதிவில் 58 தொகுதிகளில், 889 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். ஒவ்வொரு தொகுதியிலும் சராசரியாக 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வடகிழக்கு டெல்லி தொகுதியில் ஆம் ஆத்மியின் கன்னையா குமார், மறைந்த பாஜக மூத்த தலைவர் சுஸ்மா சுவாராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜ் புது டெல்லி தொகுதியிலும் போட்டியிட்டனர். சுல்தான்பூரில் பாஜக வேட்பாளராக களமிறங்கிய மேனகா காந்தி மக்களவையில் ஒன்பதாவது முறையாக போட்டியிடுகிறார்.
90% தேர்தல் ஓவர்:
ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி மே 25ம் தேதி வரையில், 6 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளன. அதன்படி, மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில், 90 சதவிகித வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள 57 தொகுதிகளுக்கு வரும் ஜுன் 1ம் தேதி கடைசி கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அது நிறைவடைந்ததும், 7 கட்டங்களான பதிவான வாக்குகளும், மொத்தமாக ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன. முன்னதாக, நடைபெற்ற முதல் ஐந்து கட்ட வாக்குப்பதிவுகளில் முறையே 66.14 சதவிகிதம், 66.71 சதவிகிதம் 65.68 சதவிகிதம், 69.16 சதவிகிதம் மற்றும் சுமார் 63 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.