நாடாளுமன்ற தேர்தல் தமிழ்நாடு உள்ள 39 தொகுதிகள், ஒரு தொகுதியை கொண்ட புதுச்சேரிக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையொட்டி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தேர்தல் ஆணையம் அறிவித்தபடி தமிழ்நாட்டில் வேட்பு மனு தாக்கல் இன்று துவங்கி வரும் 27 ஆம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் சேலம் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக விரிவான ஏற்பாடுகளை தேர்தல் நடத்தும் அலுவலர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பணி:
குறிப்பாக தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் தொலைவிற்கு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் நடத்தும் அலுவலக வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் மத்திய துணை ராணுவத்தினர் உள்பட ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வேட்பு மனுக்கான படிவங்கள் மற்றும் ஆவணங்களை தயார் நிலையில் வைத்துள்ளனர். சேலம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக மற்றும் அதிமுக நேரடியாக களம் காணும் நிலையில் அக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தற்போது தான் வெளியிடப்பட்டுள்ளதால் ஓரிரு நாட்களில் அவர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் நாளில் ஒருவர்:
நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு போட்டியிட பிஸ்மில்லா மக்கள் கட்சி வேட்பாளர் அகமது ஷாஜகான் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இன்று முதல் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வருகிற நிலையில் முதல் வேட்பாளராக பிஸ்மில்லா மக்கள் கட்சியை சேர்ந்த அகமது ஷாஜகான் முதல் நபராக வேட்புமனு தாக்கல் செய்தார். பிஸ்மில்லா மக்கள் கட்சி வேட்பாளர் அகமது ஷாஜகான் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அகமது ஷாஜகான், அமைப்புசாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் தேர்தல் நடைபெறும் நாளில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை வைத்தார்.