கர்நாடகவில் இருந்து தமிழகத்திற்கு காவேரி நீரை திறப்பது குறித்து அந்த மாநில மக்கள் நலனை கருத்தில் கொண்டே முடிவு எடுக்கப்படும் என வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வை தனிமைப்படுத்துவதுதான் பா.ஜ.க.வின் நோக்கம் எனவும் அதனை அ.தி.மு.க.வும் உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அலுவலகத்தில் நாாளுமன்ற தேர்தலில் ஆந்திரா, கர்நாடகா, கேரளம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டார்.
முன்னதாக புதிய உழைப்பாளர் கட்சி என்ற கட்சியை அவர் அறிமுகப்படுத்தினார். இந்த கட்சி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கூட்டணியை ஆதரித்து பிராச்சாரம் மேற்கொள்ளும் எனவும் குறிப்பாக விசிக போட்டியிடும் இரண்டு தொகுதிகளிலும் பிரச்சார பணிகளை மேற்கொள்ளும் என கூறினார்.
பின்னர், தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசியதன் விவரம்
புதிய உழைப்பாளர் கட்சி குறித்து பேசுகையில், “ அரசியலமைப்பு சட்டத்தின் பாதுகாப்பை கருதி I.N.D.I.A. கூட்டணியை ஆதரிக்கிறது. புதிய உழைப்பாளர் கட்சி புதிய அரசியல் இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். சமூக நீதியும், சமூக நல்லிணக்கமும் இந்த அரசியல் இயக்கத்தை முதன்மையான குறிக்கோள்" என கூறினார். "சாமியின் பெயரால் இந்த மண்ணில் ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்த கூடாது. உழைக்கும் மக்களின் உழைப்பே சுரண்ட கூடாது. வன்முறை கூடாது. சமூக நல்லிணக்கம் தேவை என்பதை இந்த கட்சி முன்னெடுத்துகிறது. இந்த கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது. ஓ பி சி மக்களும், ஒடுக்கப்பட்ட பூர்வீக குடிகளும், சிறுபான்மையினரும் சமூகநீதி இருந்தால் மட்டுமே சமூக நல்லிணக்கத்தை பேணுவதும் நோக்கம். இந்த கட்சி விரைவில் முதலமைச்சரையும் சந்திக்க இருக்கிறார்கள்.” என்று தெரிவித்தார்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் விவரம்
” கர்நாடகாவில் ஏற்கனவே 30 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினோம். ஆனால் காங்கிரசுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதற்காக வேட்பாளர்களை திரும்ப பெற்றோம் என கூறினார். ஆந்திராவில் மட்டும் தான் I.N.D.I.A. கூட்டணியில் சேர இருக்கிறோம். பிற மாநிலங்களில் அதற்கான சூழ்நிலை அமையவில்லை. வி.சி.க. போட்டியிடும் தொகுதிகள் காங்கிரசுக்கு பாதிப்பு ஏற்படுத்தாதவாறு இருக்க வேண்டும் என முடிவெடுத்தோம். ஆந்திராவில் நாளை நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு நாடாளுமன்ற தொகுதிகளும் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கையோடு இருக்கிறோம். தமிழ்நாடு தேர்தல் நடைபெற்ற பிறகு ஆந்திராவில் தேர்தல் நடைபெறுவதற்கு காலம் உள்ளது. ஒவ்வொரு மாநிலங்களும் தனித்தனியாக தேர்தல் அறிக்கை தயார் படுத்திக் கொண்டிருக்கிறோம். காவேரி விவகாரத்தில் கர்நாடக மக்களின் நலனை கருத்தில் கொண்டு முடிவெடுக்கும்.” என தெரிவித்தார்.
டெல்லி முதலமைச்சர் கைது செய்யப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர்,” டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜிரிவால் கைது சட்ட விரோதமானது. தோல்வி பயத்தால் பா.ஜ.க இவ்வாறு செயல்படுகிறது. எதிர்க்கட்சிகள் மீது அடக்கு முறையை ஏவுகிறது. இரண்டு முதலமைச்சர்களை கைது செய்து சிறைப்படுத்தி இருக்கிற பாஜகவில் பாசிசம் தலைவிரித்து ஆடுகிறது. என் டி ஏ கூட்டணிகள் சேர அச்சுறுத்துகிறது. பா.ஜ.க. எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தியே கூட்டணிகள் சேர்க்க வைக்கிறது. தேர்தல் பத்திரம் ஊழல் என்பது இதுவரை நிகழாத மிகப்பெரிய ஊழல். சட்டபூர்வமாக ஊழலை அங்கீகரித்து இருக்கிறது பாஜக. நல்ல வேலையாக உச்ச நீதிமன்றம் தலையிட்டு தேர்தல் பத்திரம்மூலம் பெற்ற நன்கொடை ஏற்புடையதல்ல என கூறி இருக்கிறது. மிக முக்கியமான கார்ப்பரேட் நிறுவனங்களை, அரசியல் தலைவர்களை விசாரணை நிறுவனங்கள் மூலமாக அமலக்கத்துறை, வருவாய் வரித்துறை மூலமாக பா.ஜ.க. அச்சுறுத்தி வருகிறது. இது பாசிசத்தின் உச்சம். தேர்தல் பத்திரத்தின் ஊழல் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர வைத்திருக்கிறது. அதிமுகவை பாஜக கூட்டணியில் இணைப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அவர்களால் 2019 ஆம் ஆண்டு உருவாக்கிய கூட்டணி போல உருவாக்க முடியவில்லை. அவர்களுக்கு அ.தி.மு.க.வை தனிமைப்படுத்துவது தான் நோக்கம். அதிமுகவும் இதை உணர்ந்து கொள்வது தேவையான ஒன்று.” என்று தெரிவித்தார்.
தேர்தல் குறித்து பேசுகையில், “ இந்த தேர்தல் இந்திய நாட்டு மக்களுக்கும் சங்பரிவார் கும்பலுக்கும் நடக்கும் தேர்தல் என கூறினார். தமிழ்நாட்டில் பா.ஜ.க. ஒரு இடத்தில் வெற்றி பெற்றால் கூட அது சந்தேகத்தை ஏற்படுத்தும். பாஜக இந்த தேர்தலில் அதிமுகவை விட வாக்கு சதவீதம் அதிகம் உள்ளது என்று நிரூபிக்க இந்த தேர்தலில் அவர்கள் தனித்து போட்டியிடுகின்றனர்.” என்று தெரிவித்தார்.
- கர்நாடகவில் 6 தொகுதிகள்
- கேரளாவில் 5 தொகுதிகள்
- தெலுங்கானாவில் 10 தொகுதிகள்
மகாராஷ்டிராவில் ஒரு தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக பானை சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். ஆந்திர மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி உடன் சேர்ந்து போட்டியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. நாளை (25.03.2024) அந்த பேச்சுவார்த்தை நிறைவு பெறும்,” என அவர் தெரிவித்தார்.