நெல்லை தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டது. காங்கிரசில் நிலவும் உட்கட்சி பூசல் காரணமாக ஏற்கனவே வேட்பாளர் அறிவிப்பு தாமதமாக அறிவிக்கப்பட்டதோடு கடைசி நாளான நேற்று காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக போட்டி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தனர். அதில் ஒருவரது வேட்புமனு நேரம் முடிந்துவிட்டதை காரணம் காட்டி நிராகரிக்கப்பட்டது. முன்னாள் எம்பி ராமசுப்புவின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது, மேலும் கட்சி தலைமை அறிவித்த ராபர்ட் புரூஸ் போட்டியிடும் நிலையில் முன்னாள் எம்பி ராமசுப்புவும் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடப்போவதாக நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்து சென்றார். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து தனக்கு சீட் கிடைக்காத ஆதங்கத்தில் வேட்புமனு தாக்கல் செய்ததாகவும்,அதனை வாபஸ் பெறுவதாகவும் அறிவித்தார். இந்த நிலையில் தற்போது கட்சி தலைமை அறிவித்த வேட்பாளரான ராபர்ட் புரூஸ் மீது மோசடி குற்ற வழக்குகள் இருப்பதாகவும், அதனை மறைத்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகவும், எனவே அவருடைய மனுவினை நிராகரிக்க வேண்டும் என்றும் பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளிக்க வந்தனர்.
அப்போது அவர்கள் வைத்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது, நெல்லை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராபர்ட் புரூஸ் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இவர் கிறிஸ்தவ அமைப்புகளான சினாட் மற்றும் CSITA என்ற அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளில் நீண்ட காலமாக இருந்து வந்தவர். இந்த நிலையில் அவர் பொறுப்பு வகித்த காலத்தில் அமைப்பின் நிதிகளை கையாடல் செய்ததாகவும், மோசடை நபர்களை காப்பாற்றும் விதமாக காவல்துறைக்கு தவறான தகவல் அளித்துள்ளதாக ராபர்ட் புரூஸ் மீது குற்ற வழக்குகள் கோவை மாநகர குற்றப்பிரிவில் நிலுவையில் உள்ளது. அதே போல இவரது அமைப்போடு தொடர்பில் இருந்த தேவகாடாட்சம் என்பவர் மீது ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் குண்டூர் காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் ராபர்ட் புரூஸ் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில் அவருடைய முகவரி என்று குறிப்பிட்ட அதே முகவரிதான் தேவகடாட்சம் மீது ஆந்திர மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையிலும் தேவகடாட்சத்தில் முகவரியாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இது ஒன்றே போதும் இவர் மோசடி சட்டத்தின் தொடர்புக்கு உடந்தையாக இருந்தார் என்று. அதுமட்டுமின்றி இவர் பதவி வகித்த அமைப்பின் மூலம் நடத்தப்படும் பாலிடெக்னிக் கல்லூரி பல கோடி ரூபாய் நன்கொடை பெற்று மாணவர்களுக்கு போலி சான்றிதழ் வழங்கிய குற்றத்திற்காக கன்னியாகுமரி மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு நிலுவையில் உள்ளது.
உச்ச நீதிமன்றம் குற்றவழக்குகளை வேட்பாளர்கள் மறைக்கக்கூடாது என தெளிவாக கூறியுள்ளது. இந்த நிலையில் உயர்பதவியில் இருந்து கொண்டு மோசடி மட்டுமே செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்பட்டு வருகின்றன. எனவே ராபர்ட் புரூஸ் விண்ணப்ப படிவத்தில் குற்ற வழக்குகள் குறித்த தகவல்களை மறைத்திருப்பது வேண்டுமென்றே ஏற்பட்டதாகும், இந்திய அரசியலைப்பு சட்டம் மற்றும் தேர்தல் நடத்தை விதிகள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் ஆகியவற்றிற்கு எதிரானதாகும். எனவே அவருடைய வேட்புமனு நிராகரிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். இதனால் நெல்லை தொகுதியில் காங்கிரஸ் கட்சியினரிடையே நடைபெறும் பிரச்சினை ஒருபுறம் என்றால், கட்சி அறிவித்த வேட்பாளர் குற்ற வழக்குகள் இருப்பதை மறைத்திருப்பதாக கூறி அவரது மனுவை நிராகரிக்க வேண்டும் என்று பாஜகவினர் மனு அளித்திருப்பது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.