நன்றாக படித்து ஆங்கிலத்தில் பேசக் கூடியவர்களை டெல்லிக்கு அனுப்புங்கள் படிக்கத் தெரியாதவர்களை எங்களோடு சட்டமன்றத்திற்கு அனுப்புங்கள். அங்கே சபாநாயகர் அனைத்தையும் அவை குறிப்பில் இருந்து நீக்கிவிடுவார் எனும் நகைச்சுவையோடு அமைச்சர் துரை முருகன் தருமபுரி பொதுக்கூட்டத்தில் பேசினார்.
இந்தியா கூட்டணியில் தருமபுரி நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் வழக்கறிஞர் ஆ.மணி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தருமபுரி மாவட்டம் இண்டுர் பேருந்து நிலையத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி தலைமையில் மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் முன்னிலையில் தேர்தல் பிரச்சார பொது கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திமுக பொது செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் ஆதரவு திரட்டினார்.
அமைச்சர் துரைமுருகன் பேச்சு
அப்போது பேசிய அவர், ”நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் ஆ.மணி போட்டியிடுகிறார். படிக்கத் தெரிந்தவர்கள் எல்லாம் நாடாளுமன்றத்திற்கு டெல்லி அனுப்புங்கள். படிக்கத் தெரியாதவர்களை எங்களிடம் சட்டமன்றத்திற்கு அனுப்புங்கள். அங்கு சபாநாயகர், பேசுவதெல்லாம் அவை குறிப்பில் இருந்து எடுத்து விடுகிறேன் என்று தெரிவித்து விடுவார். இந்த தேர்தலில் ஒவ்வொரு நாளும் தங்களது அணியை மாற்றிக்கொள்ளும் கட்சிகளுக்கும், திமுகவிற்கும் போட்டி இல்லை. திமுகவிற்க்கும் மோடிக்கும் தான் போட்டி. ஆனால் இந்தியாவின் பிரதமர் மோடி தான் ஆட்சிக்கு வந்தால் திமுகவை தொலைத்து விடுவேன், அழித்து விடுவேன் என்று வீரவசனம் தினந்தோறும் பேசி வருகிறார். மோடி அவர்களே இப்படி திமுகவை பேசி பிரதமர்கள் எல்லாம் போன இடம் தெரியவில்லை. திமுகவும், காங்கிரசும் உங்கள் வீட்டு குப்பை தொட்டி இல்லை” என காட்டமாக பேசினார்.
மேலும், “தமிழ்நாட்டில் எங்களை நீங்கள் என்ன குறை சொல்ல போகிறீர்கள். சுவிட்சர்லாந்து வங்கியில் பணம் இருக்கிறது ரூ.15 லட்சம் போடுகிறேன் என்று சொன்னீர்கள். அதன் பிறகு சென்று பார்த்தேன் பணம் இல்லை என்று சொல்லுங்கள். ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் செய்கிறார்கள் நீங்கள் 4 பொய் சொல்லி தேர்தலில் நில்லுங்கள். 53 ஆண்டுகள் நான் கலைஞரின் மடியில் வளர்ந்தவன். கலைஞரை மிஞ்சியவர் முதல்வர் ஸ்டாலின். எனக்கு வாக்களித்தவர்கள் மட்டுமல்ல எனக்கு வாக்களிக்காத மக்களும் வாழ்த்துகிற அளவுக்கு ஆட்சி நடத்துவேன் என்று தெரிவித்தார். இங்கு போட்டியிடுகின்ற கட்சிக்காரர்களைப் பற்றி நம் கவலை இல்லை திங்கட்கிழமை ஒரு இடம் செவ்வாய்க்கிழமை ஒரு இடம் புதன்கிழமை ஒரு இடம் வியாழக்கிழமை மாறி விடுவார்கள் இது ஒரு சிலரால் எங்களுக்கெல்லாம் அவமானமாக இருப்பது. இதுதான் ஜனநாயகம்.
வானத்திலேயே பறந்தீர்கள்
பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம். பெண்களுக்கு ஆயிரம் ரூபாய், கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறார். தாய்மார்கள் இப்பொழுது பேருந்தில் செல்லும் போது எந்த ஊருக்கு செல்கிறீர்கள் என்று கேட்டால் இந்த பஸ் எந்த ஊருக்கு செல்கிறது அந்த ஊருக்கு விடு என்ற அளவில் பயணம் செய்கிறார்கள். பெண்களுக்காயிரம் கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம், மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய், காலை உணவு, மதிய உணவு வழங்கி வருகிறது இந்த ஆட்சி. இதற்காக மத்திய அரசு நீங்கள் ஒரு ரூபாய் கொடுத்திருக்கிறீர்களா. மழை வெள்ளத்தில் நூற்றுக்கணக்கானோர் இறந்தனர். பிரதமர் மோடி அவர்களே ஒரு நாளாவது மக்களை பார்த்ததுண்டா. அப்போதுதான் நீங்கள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்தீர்கள். வானத்திலேயே பறந்தீர்கள் என தெரிவித்தார்.