நாடாளுமன்றத் தேர்தல்:


இந்திய நாட்டின் 18 -வது நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக 2024 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜூன் வரை நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே ஏப்ரல் 19 -ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை நான்கு முனைப் போட்டியில் களத்தில் உள்ளன.


திமுக தலைமையில் காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளும் அதிமுக தலைமையில் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிடுகின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின்கீழ் பாமக உள்ளிட்ட கட்சிகள் களம் காண்கின்றன. கூட்டணிக் கட்சிகள் இறுதி செய்யப்பட்டு, தொகுதிப் பங்கீடு முடிவு செய்யப்பட்டு, வேட்பாளர்களும் இறுதி செய்யப்பட்டு, அறிவிக்கப்பட்டனர். வேட்பாளர்கள் மனுத் தாக்கலும் செய்து வருகின்றனர். 




காங்கிரஸ் வேட்பாளர் சுதா ராமகிருஷ்ணன்:


இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணியில் 9 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ், முதல்கட்டமாக 7 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் திருநெல்வேலி தொகுதிக்கு ராபர்ட் ப்ரூஸ் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில், நீண்ட இழுபறிக்குப் பிறகு கடைசி கட்டத்தில் மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சுதா ராமகிருஷ்ணன் என்பவர் அறிவிக்கப்பட்டு உள்ளார்.




திடீர் திருப்பம்:


மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் முன்னதாக ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பரான பிரவீன் சக்கரவர்த்தி மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக களம் காண அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்பட்டது. அதே போன்று தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான தற்போதைய திருச்சி எம்பி திருநாவுக்கரசுக்கு, திருச்சி தொகுதி மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அவரும் மயிலாடுதுறை தொகுதியை கேட்டு வந்ததாக கூறப்பட்டது.


அதேபோன்று இந்த தொகுதியை சேர்ந்த மூன்று முறை இங்கிருந்து நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக தேர்வாகி, மத்திய அமைச்சராக இருந்த மணிசங்கர் அய்யரும், அவருக்கு வாய்ப்பு வழங்காத பட்சத்தில் அவரது மகளுக்காக இந்த தொகுதியை கேட்டு வந்தாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தனர். இவ்வாறான சூழலில் காங்கிரஸ் தலைமை வேட்பாளரை தேர்வு செய்வதில் பெரும் சிரமத்தை சந்தித்து. இந்த நான்கு பேரில் ஒருவருக்கு தான் சீட் என பரவலாக சொல்லப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக தமிழக மகிளா காங்கிரஸ் தலைவி சுதா ராமகிருஷ்ணனுக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வாய்ப்பு வழங்கியுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இவர் கடலூர் பாராளுமன்ற தொகுதி கேட்டு வந்ததாக கூறப்படும் நிலையில் அனைவருக்கும் ஆச்சரியம் ஏற்படுத்தும் விதமாக இவருக்கு மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.




எதிர் வேட்பாளர்கள் யார்? யார்?


மயிலாடுதுறை தொகுதியில் அதிமுக சார்பில் அதிமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் மகன் பாபு என்பவர் போட்டி இடுகிறார். அதேபோல பாஜக கூட்டணியில் மயிலாடுதுறை வேட்பாளராக பாமகவைச் சேர்ந்த ம.க.ஸ்டாலின் என்பவர் களம் காண்கிறார். நாம் தமிழர் கட்சியில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் களத்தில் உள்ளார். 




யார் இந்த சுதா ராமகிருஷ்ணன்?


திருவள்ளுவர் மாவட்ட கும்மிடிப்பூண்டி சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் என்பவரின் மகள் சுதா ராமகிருஷ்ணன். வழக்கறிஞரான இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் கடந்த 2020 -ஆம் ஆண்டுமுதல் தமிழக மகிளா காங்கிரஸ் கட்சி தலைவராக பதவி வகித்து வருகிறார்.


கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாரத் ஜோடோ யாத்திரை முழுவதும் ராகுல் காந்தியுடன் வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணன் நடந்து சென்றுள்ளார்.  விடுதலை புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு, இலங்கையில் உச்சகட்ட போர் நடைபெற்ற போது  காங்கிரஸ் கட்சிக்கு எதிராக முழக்கம் எழுப்பி  சோனியாவின் உருவப்படம் எரிப்பு போராட்டத்தில் பங்கேற்றவர் என்று,  காங்கிரஸ் தலைமைக்கு அக்கட்சியினரால் குற்றச்சாட்டிற்கு ஆளானவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.




வெற்றி வாய்ப்பு:


மயிலாடுதுறை தொகுதியில் 11 முறை காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு மயிலாடுதுறை காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக சொல்லப்பட்டாலும், தற்போது தொகுதிக்கு சற்றும் தொடர்பில்லாத ஒரு நபரை அறிவித்திருப்பதும், திமுக கூட்டணியில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் என்பதால் தொடர்ந்து சொந்த கட்சிக்காக பணி செய்யாமல் கூட்டணி கட்சிகாகவே வேலை செய்யும் சூழல் உள்ளதால் திமுகவினரும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் இம்முறை மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வெற்றி என்பது சற்று கடினமானது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.