தூத்துக்குடி மக்களவை தொகுதியில் கனிமொழி இரண்டாவது முறையாக களம் காணுகிறார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். இதில் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் கனிமொழி மீண்டும் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதும் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திமுவினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். கனிமொழி, மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதியின் புதல்வியாவார். மேலும், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் சகோதரி ஆவார். திமுகவில் மாநில மகளிரணி செயலாளராக நீண்ட காலம் பணியாற்றிய அவர், கடந்த 2022 அக்டோபர் முதல் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக இரு முறை மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு பணியாற்றியுள்ளார்.
முதல் முறையாக 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு 3,42,209 வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பெற்றார். தொடர்ந்து ரசாயனம் மற்றும் உரங்கள், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகங்களில் நிலைக்குழு தலைவராக பணியாற்றியுள்ளார். கவிஞராகவும், எழுத்தாளராகவும் அறியப்படும் கனிமொழி, கருவறை வாசனை, அகத்திணை, சிகரங்களில் உறைகிறது காலம் ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகளையும், பார்வைகள், கருக்கும் மருதாணி ஆகிய இரு கட்டுரைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். மேலும், தி இந்து ஆங்கில நாளிதழிலும், சிங்கப்பூரில் இருந்து வெளிவரும் தமிழ் முரசு இதழிலும் பணியாற்றியுள்ளார். தற்போது அவர் இரண்டாவது முறையாக தூத்துக்குடி மக்களவை தொகுதியில் களம் காணுகிறார்.
சுய விபர குறிப்பு:
பெயர்: கனிமொழி
வயது: 56
கல்வித் தகுதி: எம்ஏ
தந்தை பெயர்: மு.கருணாநிதி தாயார் பெயர்: ராஜாத்தி அம்மாள்
கணவர் பெயர்: ஜி.அரவிந்தன்
மகன்: ஆதித்யன்
கட்சி பதவி: துணைப் பொதுச்செயலாளர்
அரசு பதவி: 2007 முதல் 2019 வரை மாநிலங்களவை உறுப்பினர்,
2019 முதல் தற்போது வரை தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர்.
முகவரி: குறிஞ்சி நகர், தூத்துக்குடி.
இந்நிலையில் தூத்துக்குடி திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் பி.கீதாஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெற இருக்கின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் I.N.D.I.A கூட்டணி சார்பில் தி.மு.க வேட்பாளராக திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் தி,மு.கழக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.
தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திருமிகு. கனிமொழி கருணாநிதி அவர்கள் விமானம் மூலம் தூத்துக்குடி வருகை தருகிறார். தூத்துக்குடி வருகை தரும் அவருக்கு தூத்துக்குடி F.C.I குடோன் அருகே மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட இருக்கிறது. வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து தூத்துக்குடி மாநகரத்திலுள்ள தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் தேசப்பிதா காந்தி பெருந்தலைவர் காமராஜர், செக்கிழுத்த செம்மல் வ.உ.சி, அண்ணல் அம்பேத்கார், தேவர் திருமகனார், குரூஸ்பர்னாந்து, இந்திராகாந்தி ஆகிய தேசிய தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட இருக்கிறது. இந்த வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியிலும், தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தி.மு.கழக நிர்வாகிகள், தொண்டர்கள், I.N.D.I.A கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தோழர்கள் அனைவரும் இதனையே அழைப்பாக ஏற்று பெருந்திரளாகக் கலந்து கொள்ள அன்புடன் அழைப்பதாக தெரிவித்து உள்ளார். நாளை இந்தியா கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.