மக்களவை தேர்தலுக்கான தேதி இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான தீவிர ஆலோசனையில் இந்திய தேர்தல் ஆணையம் களமிறங்கியுள்ளது. மத்தியில் எப்போதும் போல பாஜகவும் காங்கிரஸ் கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவும் நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை உள்ளடக்கிய 40 மக்களவை தொகுதியில் யார் யார் போட்டியிடுவார்கள் என்பதை தெரிந்துகொள்வதில்தான் ஆர்வம் அதிகமாக உள்ளது. 


கடந்த மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்த பாஜக கட்சி, இந்த முறை தனியாக கூட்டணி அமைத்து 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட போகிறது என தெரிகிறது. இதையடுத்து, பாஜக சார்பில் யார் யார் எந்த தொகுதியில் போட்டியிடுவார்கள் என்பது சுவாரஸ்யமாக இருக்கும். 


புதுச்சேரியில் போட்டியிட கடும் போட்டியா..? 


அந்தவகையில், புதுச்சேரி மக்களவை தொகுதியில் போட்டியிட பாஜக சரியான வேட்பாளரை தேடி வரும் நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை களமிறக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், மக்களவை முன்னாள் உறுப்பினர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரை இத்தொகுதியில் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகளை பாஜக மேலிடம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பட்டியலில் முதல் முன்னுரிமை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கே.


அமைச்சர் நமச்சிவாயம் முன்னணியில் இருப்பதாகக் கூறப்பட்டாலும், அவர் மக்களவை தேர்தலில் போட்டியிடுவதில் ஆர்வம் காட்டவில்லை என்றும், புதுச்சேரி அரசியலில் தனது முதலமைச்சர் கனவு நனவாகும் வகையில் முக்கியப் பங்கு வகிக்க விரும்புவதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. மேலும், புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமியிடம் சரியான வேட்பாளரை தேர்வு செய்யும் பொறுப்பை பாஜக அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 


பாஜகவின் 2வது வேட்பாளர் பட்டியல் எப்போது..?


கடந்த சனிக்கிழமை யாரும் எதிர்பார்க்காத வகையில், மத்திய பாஜக 195 மக்களவை தொகுதிக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. இதில், பிரதமர் மோடி மூன்றாவது முறையாக வாரணாசி தொகுதியில் போட்டியிடுவார் என்றும், உள்துறை அமைச்சர் அமித் ஷா காந்தி நகர் தொகுதியில் போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை தொடர்ந்து 2வது வேட்பாளர்கள் பட்டியலையும் விரைவில் வெளியிட பாஜக மேலிடம் தயாராகி வருகிறது. 


நேற்று மாலை புதுச்சேரி முதலியார்பேட்டையில் இருக்கும் சுகன்யா கன்வன்சன் செண்டரில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் முதலமைச்சர் ரங்கசாமி. அப்போது, மக்களவை தேர்தல் நிலவரம், புதுச்சேரி தொகுதியில் பாஜக சார்பில் யாரை நிறுத்தலாம் என்பது குறித்து அமைச்சர் பிரகலாத் ஜோஷி, முதலமைச்சர் ரங்கசாமியிடம் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை வேட்பாளராக நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு இருக்குமா என்று பேசியதாகவும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, பாஜக மேலிடம் புதுச்சேரி மக்களவை தொகுதிக்கு நிர்மலா சீதாராமனை மனதில் வைத்துள்ளதாக தெரிகிறது.


இந்த சந்திப்பின்போது புதுச்சேரி மாநில மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, அமைச்சர் நவச்சிவாயம், சபாநாயகர் செல்வம், மாநில பாஜக தலைவர் செல்வ கணபதி உடனிருந்தனர்.