Lok Sabha Election 2024: ஆளுநர் பதவி ஒழிக்கப்படும் உள்ளிட்ட அதிரடியான வாக்குறுதிகளை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.


இந்திய கம்யூனிஸ்ட் வாக்குறுதிகள்:


நாடாளுமன்ற மக்களவை தேர்தலையொட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, 




  • ஆளுநர் பதவி ஒழிக்கப்படும்




  • காஷ்மீர் பிரிக்கப்பட்டது ரத்து செய்யப்படும்




  • அக்னிபாத் திட்டம், நிதி ஆயோக் போன்றவை ரத்து செய்யப்படும்




  • பொதுப்பட்டியலில் உள்ள பொருள்கள் குறித்து முடிவெடுக்கும் முன் மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்கப்படும்



  • திட்ட கமிஷன் மீண்டும் கொண்டு வரப்படும்

  • கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும்


  • சிறுபான்மை ஆணையத்திற்கு அரசியலமைப்பு சட்ட தகுதி வழங்கப்படும். 




  • வேளாண்துறைக்கு தமிழ்நாட்டை போன்றே தேசிய அளவில் தனி பட்ஜெட் வெளியிடப்படும்.




  • மத்திய அரசு கொண்டு வந்த 4 தொழிலாளர் சட்டத்தொகுப்புகள் ரத்து செய்யப்படும் 



  • விவசாயிகளுக்கான எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தப்படும்

  • அனைத்து பயிர்களையும் உள்ளடக்கிய பயிர்காப்பீட்டு திட்டத்தை உருவாக்கி, தாமதமின்றி பயனாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும்

  • அரசியலமைப்பு சட்டத்த திருத்தி வேலை செய்யும் உரிமை அடிப்படை உரிமையாக்கப்படும்

  • இளைஞர்களின் முன்னேற்றத்தை உறுதி செய்ய தேசிய இளைஞர் கொள்கை உருவாக்கப்படும்

  • மனிதக் கழிவுகளை மனிதரே அகற்றுவது முடிவுக்கு கொண்டுவரப்படும்

  • தலித்துகள் எந்த மதத்தைச் சார்ந்திருந்தாலும் இடஒதுக்கீடு நலன்கள் வழங்கப்படும்

  • பத்திரிகை சுதந்திரத்தை பறிக்கும் வகையில் இயற்றப்பட்டுள்ள பத்திரிகைகள் மற்றும் பதிவுச் சட்டத்தின் பாதகமான அம்சங்கள் நீக்கப்படும் போன்ற வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.


திமுக கூட்டணியில் சிபிஐ:


தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி திருப்பூரில் கே. சுப்பராயன் மீண்டும் போட்டியிட உள்ளார். நாகப்பட்டினத்தில் வை. செல்வராஜு வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மூத்த தலைவர் நல்லகண்ணு முன்னிலையில் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.


முத்தரசன் நம்பிக்கை:


தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிறகு பேசிய முத்தரசன், “அரசியலமைப்பு சட்டத்தின்படி உருவாக்கப்பட்ட அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்றவற்றை பயன்படுத்தி பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை ஒடுக்கி வருகிறார். பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளுக்கு உடனுக்குடன் சின்னம் ஒதுக்கும் தேர்தல் ஆணையம், எதிர்க்கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்காமல் காலதாமதம் செய்கிறது.  தேர்தல் ஆணையம் நடுநிலையான தேர்தலை நடத்தும் என்ற நம்பிக்கை இல்லை.


உச்சநீதிமன்ற தீர்ப்புகள் கேள்விக்குறியாகி வருகின்றன. ஒரு சில தீர்ப்புகளுக்கு பிறகு நீதிபதிகள் ஆளுநரகளாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். நடைபெறுகிற மக்களவைத் தேர்தல் சர்வாதிகாரத்திற்கு எதிரான யுத்தம். அரசியலமைப்பு சட்டம், ஜனநாயகம் காக்கும் போரில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.