கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆத்தூர் பகுதியில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியது, "வேட்பாளர் குமரகுரு ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக சிறப்பாக பணியாற்றி உள்ளார். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து உதவி செய்யக்கூடியவர். முதல்வர் ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. இதனால் என்னைப்பற்றி கீழ்த்தரமாகவும், தவறாகவும் பேசி வருகிறார்.


அதிமுக பற்றியும் விமர்சனம் செய்து வருகிறார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய இரு தெய்வங்களாக இருந்து அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தை நடத்தி வருகிறார்கள். ஓராயிரம் ஸ்டாலின்கள் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்து விட முடியாது. அதிமுகவை பொறுத்தவரை ஏழை எளிய மக்கள் ஏற்றம் பெற தொடர்ந்து உழைத்து வருகிறோம். இந்தக் கட்சியை அழிக்க சிலர் நினைக்கிறார்கள். அதிமுகவைப் பற்றி யார் பேசினாலும் அவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவார்கள். இதுதான் வரலாறு. அதிமுகவை உடைக்க நினைத்தவர்கள் இன்றைக்கு எங்கு இருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்.


 


அரசியலுக்கு வந்து 5 ஆண்டுகள் கூட ஆகாத நிலையில் அண்ணாமலை அதிமுகவை அழிக்க நினைக்கிறார். உன்னைப் போல ஆயிரம் பேரை பார்த்து விட்டோம். 30 ஆண்டு காலம் தமிழகத்தை ஆட்சி செய்த கட்சியை யாராலும் அழிக்க முடியாது. அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்து போவார்கள். ஏழைகளுக்காக தொடங்கப்பட்ட கட்சி. ஏழைகள் ஏற்றம் பெற காரணம் அதிமுக கட்சி ஆட்சிதான். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் ஆட்சியின் போது மக்களுக்கான திட்டங்களை அதிகளவில் செயல்படுத்தி மக்கள் மனதில் தெய்வங்களாக வீற்றிருக்கிறார்கள். அதிமுக ஐடி விங் நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போட்டு முடக்க நினைக்கிறார் ஸ்டாலின். அத்தனை வழக்குகளையும் நீதிமன்றம் வாயிலாக எதிர்கொள்வோம்.


ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க 86 ஏக்கர் நிலம் கொடுத்தது ஸ்டாலின் தொழில்துறை அமைச்சராக இருந்தபோது தான். ஆலை விரிவாக்கம் செய்யவும் முதலீடு செய்யவும் திமுக ஆட்சியில்தான் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அதிமுக ஆட்சியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட முயன்றோம். சுற்றுச்சூழல் அனுமதி அதிமுக ஆட்சியில் கடைசி வரை வழங்கப்படவில்லை. அந்த சம்பவம் நடக்க திமுக சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைபெற்ற ஊர்வலம் தான். அப்பாவி மக்களை தூண்டிவிட்டு கலவரம் நடக்க காரணம் திமுகதான்.


மின் கட்டணம் உயர்விற்காக திமுக ஆட்சியில் விவசாயிகள் போராடியபோது துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தியது மறக்கமுடியாது. தமிழ்நாடு முழுவதும் 14 விவசாயிகள் மின் கட்டண உயர்வை எதிர்த்தற்காக சுட்டு வீழ்த்தப்பட்டனர். திமுக ஆட்சியில் பல துப்பாக்கி சூடுகள் நடந்திருக்கிறது. திருநெல்வேலியில் மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால், தாமிரபரணி ஆற்றில் குதித்து 17 பேர் உயிரிழந்த்தற்கு திமுக ஆட்சிதான் பொறுப்பு. ஆனால் தேர்தல் நேரத்தில் அவதூறு பிரசாரம் தேர்தல் ஆதாயத்திற்காக நடத்தப்பட்டது. நீட் தேர்வு குறித்து பச்சைப் பொய் பேசுகிறார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி 2010 இல் திமுக மத்திய இணை அமைச்சர் காந்தி செல்வன் இருக்கும்போது நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது.


காங்கிரஸ் திமுக கொண்டு வந்த நீட் தேர்வை மற்றவர்கள் கொண்டு வந்த்தாக திரும்ப திரும்ப பொய் பேசி மெய்யாக்க பார்க்கிறார் ஸ்டாலின். இன்று வரை நீட் தேர்வை எதிர்த்து அதிமுகதான் போராட்டம் நடத்தி வருகிறது. 2017-ல் நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கியது அதிமுக அரசின் சாதனை. 4 ஆண்டு காலத்தில் 2160 பேர் மருத்துவப் படிப்பு படிக்க அதிமுக அரசுதான் காரணம்.


 


திமுக ஆட்சியில் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், சபரீசன் என 4 முதலமைச்சர்கள் ஆட்சி செய்கிறார்கள். இதற்கெல்லாம் முடிவு கட்டும் தேர்தலாக இந்த தேர்தல் அமையும். தமிழ்நாடு முழுவதும் ஒற்றைச் செங்கல்லை உதயநிதி காட்டி வருகிறார். 2019 இல் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியினர் 38 பேர் வெற்றி பெற்ற நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து ஏன் பேசவில்லை. நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டிருக்கும். அங்கே பேசாமல் இருந்துவிட்டு, ஒற்றை செங்கல்லை ஊர் ஊராக எடுத்துப் போய் உதயநிதி விளம்பரம் தேடுகிறார். ஊர் ஊராக ஒற்றைச் செங்கல்லை காட்டும் திமுக, பல லட்சம் செங்கல்லால் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட, தலைவால் அருகே ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கால்நடைப் பூங்காவினை 3 ஆண்டு காலமாக திறக்காமல் திமுக அரசு ஏமாற்றி வருகிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப் பூங்காவினை கட்டிக் கொடுத்தும் திமுக அரசால் திறக்க முடியவில்லை.


இன்று வரை ரிப்பன் வெட்ட முடியவில்லை. நிறைவேறாத திட்டத்திற்கு செங்கல்லை காட்டி விளம்பரம் தேடும் திமுக அரசு, முடிக்கப்பட்ட கட்ட்டத்தை திறக்கவில்லை. முழுக்க முழுக்க விவசாயிகளுக்கு கொண்ட வரப்பட்ட திட்டம். ஆடு, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு, என பல்வேறு நன்மைகளை அளிக்கும் கால்நடை பூங்கா திட்டத்தை திமுக அரசு முடக்கி வைத்துள்ளது. திறக்கப்பட்டிருந்தால், உலகளவில் சேலம் பகுதி பிரசித்தி பெற்றிருக்கும். அது கிடைக்க்க் கூடாது என குறுகிய மனம் படைத்தவராக முதலமைச்சர் ஸ்டாலின் நினைக்கிறார். அதிமுக அரசு அமைந்ததும் கால்நடை பூங்கா உடனடியாக திறக்கப்படும். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அதிமுக ஆட்சியில் உடனடியாக நிவாரணம் வழங்கப்பட்டது. திமுக 2021 இல் தேர்தல் அறிக்கையில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2500, கரும்புக்கு 4500 கொடுப்போம் என்று சொல்லி விட்டு எதையும் செய்யவில்லை. வெற்று தேர்தல் அறிக்கையாகத்தான் திமுக தேர்தல் அறிக்கை உள்ளது.சட்டமன்றத் தேர்தல் அறிக்கையையே நிறைவேற்றாத நிலையில்,  நாடாளுமன்றத் தேர்தலுக்காக மீண்டும் அதே வாக்குறுதிகளை சொல்லி திமுக அறிவித்துள்ளது. திருமண உதவித் தொகை, இலவச மடிக்கணினி உள்ளிட்ட நல்ல திட்டங்களை திமுக அரசு ரத்து செய்துவிட்டது. நல்ல திட்டங்களை ரத்து செய்வதுதான் திமுக அரசின் சாதனை. கொள்ளையடிப்பதற்காகத்தான் மாநிலத்தை போலவே, மத்தியிலும் ஆட்சிக்கு வர ஸ்டாலின் துடிக்கிறார். கண்ணுக்குத் தெரியாத காற்றிலும் ஊழல் செய்து, தமிழகத்தின் மானத்தை வாங்கி விட்டது. பல ஊழலுக்கு சொந்தமான கட்சி திமுக. ஊழலுக்கு கலைக்கப்பட்டது திமுக அரசுதான்.


அதிமுக ஆட்சி பொற்கால ஆட்சியாக நடைபெற்றது. அரிசி, சர்க்கரை, எண்ணெய், பருப்பு என உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து, விலைவாசி விண்ணை முட்டுகிறது. இதனால் மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். கொரோனா காலத்தில் தைப்பொங்கலின் போது அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.2500 வழங்கப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்கு திமுக அரசு அளித்த பொங்கல் தொகுப்பில் 21 பொருட்களாக வழங்கியதில் எதிலும் தரம் இல்லை. ஏழைகளுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கியதில் பல கோடி ஊழல் செய்துள்ளனர். மக்கள் விரோத அரசாக திமுக அரசு செயல்படுகிறது. திமுக கட்சியல்ல. கார்ப்பரேட் நிறுவனமாக விரிவுபடுத்துகிறார்கள். அதிமுகவில் தான் சாதாரண தொண்டன் பதவிக்கு வரமுடியும்" என்று பேசினார்.