மக்களவை பொதுத் தேர்தலையொட்டி, சேலம் மக்களவைத் தொகுதியில் 25 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வாக்காளா்கள் தேர்தல் நாளன்று எவ்வித சிரமமும் இன்றி வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களிக்க எதுவாக தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள வாக்காளா் தகவல் சீட்டுகள் அனைத்து வாக்காளா்களுக்கும் வழங்கும் பணி துவங்கியது. அதன்படி வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், வீடு வீடாக சென்று வாக்காளா்களுக்கு வாக்காளா் தகவல் சீட்டுகளை வழங்கி வருகின்றனர். சேலம் மாநகர் கோரிமேடு பகுதியில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பிருந்தா தேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து இப்பணியானது வரும் 13 ஆம் தேதிக்குள் முடித்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் வாக்காளா் தகவல் சீட்டுகள் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் மட்டுமே வாக்காளா்களிடம் வழங்கப்பட வேண்டும் எனவும், வேறு நபா்களோ அல்லது அரசியல் கட்சி சாா்ந்த நபா்கள் மூலமாகவோ விநியோகிக்க கூடாது என மாவட்ட தேர்தல் அலுவலர் பிருந்தா தேவி அறிவுறுத்தியுள்ளார்.



இதேபோன்று மக்களவைப் பொதுத் தேர்தலையொட்டி, வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட அஸ்தம்பட்டி, உழவர் சந்தை பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டார். குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் 14,56,299 ஆண் வாக்காளர்கள். 14,71,524 பெண் வாக்காளர்கள் மற்றும் 299 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என ஆக மொத்தம் 29,28,122 வாக்காளர்கள் உள்ளனர். சேலம் மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு நாளும் பல்வேறு இடங்களில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை சேலம் மாவட்ட நிர்வாகம் செய்து வருகின்றன.



விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கான அட்டவணை தயார் செய்யப்பட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நாள்தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, இன்றைய தினம் வாக்காளர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சேலம், அஸ்தம்பட்டி, உழவர் சந்தை அருகில் மக்களவைப் பொதுத்தேர்தலில் அனைவரும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு கிராமிய கலை நிகழ்ச்சிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். மேலும், அப்பகுதியில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.