மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ள  நிலையில், தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தி.மு.க. தலைவரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார்.


இது இனத்தின் ஆட்சி:


அப்போது, அவர் பேசியதாவது, கொடுத்த வாக்குறுதிகளை செயல்படுத்தி காட்டிய நெஞ்சு உறுதியுடன், உங்கள் முன்னால் கம்பீரமாக நான் நின்று கொண்டிருக்கிறேன். அந்தப் பணியை முடித்தவுடன் முதல்வரின் முகவரி என்ற பெயரில், கோட்டைக்கு எனக்கு வரும் மனுக்களுக்கு தீர்வு காண, தொடர்ந்து ஆய்வு கூட்டங்கள் நடத்துகிறேன். ஆட்சிக்கு வந்ததும் செய்த திட்டங்கள் இந்தியாவே பாராட்டுகிறது.


இது தனிப்பட்ட ஸ்டாலினின் ஆட்சி அல்ல. ஒரு இனத்தின் ஆட்சி என்று பெருமையுடன் சொன்னேன். ஒவ்வொரு தனி மனிதருடைய பிரச்சனைகளை தீர்க்க பார்த்து, அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றி தர பாடுபடுகிறோம். தேர்தல் அறிக்கையில்சொன்ன திட்டங்கள் மட்டுமல்ல, சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றினவன் தான் இதோ உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்க கூடிய முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.


நான் முதல்வன் திட்டம்:


ஆட்சிக்கு வந்தவுடன் தொழில் வளத்தை பெருக்க தொழில் முனைவர்களுடன் கூட்டம் நடத்தினேன். நம்ம இளைஞர்கள் வேலை பெற திறன் பயிற்சி தேவை என சொன்னாங்க. உடனே அதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் தான் நான் முதல்வன் திட்டம். அந்த திட்டத்தின் மூலம் இதுவரை 28 லட்சம் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்கியுள்ளோம்.


திட்டத்தை செயல்படுத்துவது மட்டுமில்லாமல் அதில் பயிற்சி பெற்ற இளைஞர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தினேன்  நான் முதல்வன் திட்டம் நம்முடைய கனவுகளை நிஜமாக்குகின்ற திட்டமாக மாறி உள்ளது. இதை நான் தேர்தல் அறிக்கையில் கூறவில்லை. தேர்தல் அறிக்கையில் சொல்லாத மற்றொரு புரட்சிகர திட்டத்தை செய்தேன்‌. முதலமைச்சரின் காலை உணவு திட்டம். அதற்கும் நான் எதிர்கொண்ட அனுபவம் தான் காரணம்.


காலை உணவுத் திட்டம்:


பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு திட்டத்தை தயார் செய்ய வேண்டும் என கூறினேன். அதிகாரிகள் என்னிடம் பணிவாக, சார் நம்ம நிதி நிலைமை மோசமாக இருக்கிறது. இதை நாம் தேர்தல் அறிக்கையில் கூட சொல்லவில்லை என அதிகாரிகள் கூறினார்கள்.


உடனே நான் கூறினேன் வாக்குறுதி சொல்லவில்லை என்றால் என்ன? நம் எதிர்கால தலைமுறைகள் குழந்தைகள் தான். அவர்கள் காலையில் நன்றாக சாப்பிட்டு நல்ல உடல் நலத்துடன் இருந்தால்தான். அவர்கள் படிப்பது மனதில் பதியும் . இதை நாம் கண்டிப்பாக செய்ய வேண்டும். நிதிநிலை சரி செய்யவும் திட்டம் போடுவோம், நீங்க பைலை தயார் பண்ணுங்கள் என உத்தரவு போட்டேன். இந்த பைலின் ஸ்டாலின் போட்ட கையெழுத்தால்,16 லட்சம் குழந்தைகள் வயிறார காலை உணவு சாப்பிடுகிறார்கள்.


வெயிட் அண்ட் சி:


பழனிச்சாமி அவர்களே வெயிட் அண்ட் சி, மக்களுக்கு நன்மை செய்வது மட்டும்தான் ஒரே குறிக்கோள். பார்த்து பார்த்து தமிழ்நாட்டை முன்னேற்றிக் கொண்டிருக்கிறோம். பழனிச்சாமி என்ன கேட்கிறார். நான் ஒன்றிய அரசிடம் அவார்ட் வாங்கினேன். நீங்க ஏதாவது அவார்ட் வாங்கினீங்களா?னு கேட்கிறார். பழனிச்சாமி அவர்களே, உங்களுக்கு அவர்கள் கொடுத்த அவார்டு எதுக்கு தெரியுமா? படத்தில் வருகின்ற டயலாக்கை போல் நமக்கு வாய்ந்த அடிமைகள் மிக மிக திறமைசாலி . அதற்கேற்றது போல் நீங்கள் இருக்கிறீர்கள் என அவார்ட் கொடுத்தார்கள். அதனால் பிஜேபி அரசு கொடுத்திருக்கும். பழனிச்சாமி அவர்களே நாங்கள் மக்களிடம் அவார்டு வாங்கி இருக்கிறோம்.


இன்னொரு அவார்டு வெயிட்டிங் . ஜூன் நான்காம் தேதி 40 க்கு 40 என்ற விருது  . பழனிச்சாமி அவர்களே வெய்ட் அண்ட் சி. பதவி சுகத்திற்காக தமிழ்நாட்டை பா.ஜ.க.விடம் அடகு வைத்ததில் நீங்கள் நம்பர் ஒன். மோடி தான் எங்கள் டாடி என்று சொன்னீர்களே? பா.ஜ.க. இந்தியை திணித்த பொழுது நாங்கள் எதிர்த்தோம். அப்பொழுது அ.தி.மு.க. அமைச்சர் மும்மொழி கொள்கையை ஆதரித்தார்கள். பச்சை பொய்களைப் பேச வைத்து அழகு பார்த்தவர்தான் இந்த பழனிச்சாமி.


பா.ஜ.க.வை ஏன் எதிர்க்கவில்லை?


ஒரு பத்திரிகையில் இப்பொழுது பழனிசாமி பேட்டி கொடுத்துள்ளார். அ.தி.மு.க. சில தொகுதிகளில் வந்து பா.ஜ.க.விற்கு ஆதரவு தேவைப்பட்டால் கொடுப்பீர்களா? என்ற கேள்விக்கு அவர் பதில் அளித்து பேசுகையில், ஒப்புக்காக கூட நாங்கள் தரமாட்டோம் என பேசவில்லை. பொறுத்திருந்து பாருங்கள் என வாய்தா வாங்கி இருக்கிறார் பழனிச்சாமி.


இதுதான் அவருடைய பா.ஜ.க. எதிர்ப்பு லட்சணம். எங்கேயாவது பா.ஜ.க. எங்களுடைய கொள்கை எதிரி என கூறி இருக்கிறாரா? பா.ஜ.க.வை ஆதரிக்க மட்டும் ஏன் அவரால் திட்டவட்டமாக கூற முடியவில்லை . ஒருபொழுதும் பழனிச்சாமியால் பா.ஜ.க.வை எதிர்க்க முடியாது. அதிமுகவிற்கு போடும் வாக்கு பாஜகவிற்கு போடும் வாக்கு. ஶ்ரீபெரும்புதூர் தேசிய நெடுஞ்சாலை 6 வழி சாலை விரைந்து முடிக்கப்படும், அரக்கோணம் - செங்கல்பட்டு ரயில்வே சாலை இரு வழி ஆக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.