திருமாவளவனை நினைத்தால் ஓட்டல் ஊழியரிடம் ஊத்தாப்பம் கேட்ட வடிவேல் காமெடி தான் நினைவுக்கு வருகிறது. திமுக கூட்டணியில் 2 தனி தொகுதி, 2 பொதுத் தொகுதி, ராஜ்யசபா பதவி வேண்டும் என்று சீட்டு கேட்ட அவருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் 2 தனி தொகுதி மட்டும்தான் என கூறிவிட்டார் என நடிகை விந்தியா கூறினார்.


 


 




கரூர் மாநகர், வெங்கமேடு பகுதியில் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தங்கவேலை ஆதரித்து, அதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளர் நடிகை விந்தியா திறந்த வேனில் நின்றபடி பிரச்சாரம் மேற்கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இதில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர் .


 




 


அப்போது உரையாற்றிய நடிகை விந்தியா, ”திருமாவளவனை நினைத்தால் ஓட்டல் ஊழியரிடம் ஊத்தாப்பம் கேட்ட வடிவேல் காமெடி தான் நினைவுக்கு வருகிறது. திமுக கூட்டணியில் 2 தனி தொகுதி, 2 பொதுத் தொகுதி, ராஜ்யசபா பதவி வேண்டும் என்று சீட்டு கேட்ட அவருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் 2 தனி தொகுதி மட்டும்தான் என கூறிவிட்டார். அதேபோல் ஆ.ராசாவுக்கு நீலகிரி தனி தொகுதி ஒதுக்கியுள்ளார். இதனால் ஸ்டாலினிடம் சமூகநீதி தெரியவில்லை ஜாதி தான் தெரிகிறது. செந்தில் பாலாஜி அதிமுகவில் இருக்கும் போது கரூர் வந்த ஸ்டாலின் அவர் ஊழல்வாதி அவர் மீது வழக்கு தொடர்வேன் என்று பேசினார். அதற்கு கை தட்டிய திமுக தொண்டர்கள் தற்போது செந்தில் பாலாஜி சிறையில் இருந்தாலும் அவர் நல்லவர் என்று ஸ்டாலின் பேசினால் இதற்கும் திமுக தொண்டர்கள் கைதட்டுகிறார்கள்” என்றார்.


 


 




 


தொடர்ந்து அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகை விந்தியா பேசிக் கொண்டிருக்கும்போது, திடீரென பிரச்சார வேனில் பழுது ஏற்பட்டு, லிஃப்ட் கீழே இறங்கியது. ஆனால், அதையும் பொருட்படுத்தாமல் பிரச்சார வாகனத்திற்கு உள்ளே இருந்தபடியே கைகளை உயர்த்தி, இரண்டு விரல்களை காண்பித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.