Lok Sabha Election: மக்களவைத் தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்னும் 3 நாட்களில் முடிவடைய உள்ளது.


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல்:


உலகின் மிகப்பெரிய ஜனநாயாக நாடாக கருதப்படும் இந்தியாவில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டமாக வரும் ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் கடந்த 20ம் தேதியே தொடங்கியது. ஆனால், பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் யாரும் இன்னும் வேட்புமனுத்தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், இன்று முதல் திமுக, அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளனர்.


இன்று முதல் வேட்புமனுத்தாக்கல்:


வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கான அவகாசம் கடந்த 20ம் தேதி தொடங்கிய நிலையில், வரும் 27ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில், திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் உள்ளிட்ட பிரதான கட்சிகள் மற்றும் அவற்றின் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் பெரும்பாலும் இறுதி செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து இன்று முதல் வேட்புமனுக்கல் தாக்கல் செய்யப்படுகின்றன. குறிப்பாக நல்ல நேரம் பார்த்து பிற்பகல் 12.30 மணிக்கு மேல், தேர்தல் அலுவலர்கள் அலுவலகத்திற்குச் சென்று வேட்புமனுத்தாக்கல் செய்ய வேட்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இதன் மூலம், தமிழ்நாட்டில் இனி தேர்தல் பரப்புரை களம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


வேட்புமனு தாக்கலுக்கான கட்டுப்பாடுகள்:



  • வேட்புமனு தாக்கலின் போது ஊர்வலங்கள் நடத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

  • வடசென்னை மக்களவை தொகுதியை பொறுத்தவரை பேசின் பிரிட்ஜ் சாலை, பழைய வண்ணாரப்பேட்டை மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் வேட்புமனுத்தாக்கல் செய்யலாம்

  • தென்சென்னை தொகுதிக்கு அடையாறு மாநகராட்சி தெற்கு வட்டார துணை ஆணையாளர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யலாம்

  • மத்திய சென்னை தொகுதியை பொறுத்தவரை செனாய் நகர் மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையாளர் அலுவலத்திலும் வேட்புனு தாக்கல் செய்யலாம்

  • இதே போல மற்ற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

  • வேட்புமனுக்களை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை தாக்கல் செய்யலாம்.

  • வேட்புமனுத்தாக்கல் செய்யும் போது, தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திலிருந்து 100 மீட்டருக்குள் 2 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

  • வேட்புமனுத்தாக்கலின் போது, தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திற்குள் வேட்பாளருடன் சேர்த்து 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

  • மாலை 3 மணிக்கு மேல் தேர்தல் நடத்தும் அலுவலக வளாகத்தில் மற்ற யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்


தலைவர்கள் பரப்புரை:


வேட்புமனுத்தாக்கல் பணிகள் ஒருபுறம் நடைபெற்றாலும், அரசியல் தலைவர்களின் பரப்புரை ஏற்கனவே மாநிலம் முழுவதும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.



  • முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சியில் இருந்து தனது பரப்புரையை தொடங்கிய நிலையில், இன்று கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலியில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து வாக்குச் சேகரிக்கிறார்.

  • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு காஞ்சிபுரம் பெரிய தூண், காந்தி சிலை பகுதியிலும், மாலை 6 மணிக்கு செய்யாறு மார்க்கெட் அருகிலும், இரவு 7 மணி வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகிலும், இரவு 8 மணிக்கு சேத்துப்பட்டு காமராஜர் சிலை அருகிலும், இரவு 9 மணி திருவண்ணாமலை கீழ்பென்னாத்தூர் பேருந்து நிலையம் அருகிலும் வாக்கு சேகரிக்கிறார்.

  • எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நாளை தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலியிலும், நாளை மறுநாள்  கன்னியாகுமரி மற்றும் தென்காசியிலும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க உள்ளார்.

  • தான் போட்டியிடும் தூத்துக்குடியில் ஏற்கனவே தேர்தல் பரப்புரையை தொடங்கிய கனிமொழி, வரும் 28ம் தேதி முதல் கரூர், கோவை, மதுரை மற்றும் தேனி என பல்வேறு பகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க உள்ளார் 

  • மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் வரும் 29ம் தேதி தொடங்கி ஏப்ரல் 16ம் தேதி வரை, திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஈரோடு, சென்னை, பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்.