மக்களவைத் தேர்தலுக்காக இந்தியா முழுவதும் உள்ள கட்சிகள் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன. பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியும் எதிர்கட்சிகள் இணைந்து I.N.D.I.A கூட்டணியை உருவாக்கி களமிறங்க தயாராக உள்ளது.
இந்நிலையில் பாஜக தனது தரப்பில் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 195 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக வாராணாசி தொகுதியில் களமிறங்கவுள்ளார். அதேபோல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் போட்டியிடவுள்ளார். இந்நிலையில் கேரள மாநிலம் திருச்சூரில் நடிகர் சுரேஷ் கோபி போட்டியிடவுள்ளார் என பாஜக மேலிடம் தெரிவித்துள்ளது.
இந்த பட்டியலில் 34 அமைச்சர்கள் மீண்டும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த முதற்கட்ட பட்டியலில் தமிழ்நாடு இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
195 தொகுதி:
முதற்கட்ட பட்டியலான 195 தொகுதியில், உத்தரப் பிரதேசத்தில் 51 இடங்களுக்கும், மேற்கு வங்கத்தில் 20, இடங்களுக்கும், மத்தியப் பிரதேசத்தில் 24 இடங்களுக்கும், குஜராத் மற்றும் ராஜஸ்தானில் தலா 15 இடங்களுக்கும், கேரளாவில் 12, தெலங்கானாவில் 9, அசாமில் 11, ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கரில் தலா 11 இடங்களுக்கும், டெல்லியில் இருந்து 5 இடங்களுக்கும், ஜம்மு காஷ்மீரில் 2 இடங்களுக்கும், உத்தரகாண்டில் 3 இடங்களுக்கும், அருணாச்சல பிரதேசத்தில் 2 இடங்களுக்கும் மற்றும் கோவா, திரிபுரா, அந்தமான் & நிக்கோபார் மற்றும் டையூ & டாமனில் இருந்து தலா ஒரு இடங்களுக்கும் வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.
சாதிவாரியான வேட்பாளர்கள்
இந்த பட்டியலில் 47 இளைஞர் வேட்பாளர்கள், 28 பெண்கள், 27 எஸ்.சி வேட்பாளர்கள், 18 எஸ்.டி வேட்பாளர்கள் மற்றும் 57 ஓபிசி வேட்பாளர்கள் உள்ளனர் என பாஜக தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பாஜகவுடனான கூட்டணி உறுதியாகாத நிலையில், தொடர்ந்து பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறது. கூட்டணி உறுதியான பின்பு, கூட்டணி கட்சிகளுக்கான இடங்கள் உறுதி செய்யப்பட்ட பின்புதான், தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளிவரும் என எதிர்பார்க்கலாம்.