ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக இன்று மேலும் பன்னீர்செல்வம் என்பவர் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இதன்மூலம், அந்தத் தொகுதியில் ஆறு பன்னீர் செல்வங்கள் போட்டியிட உள்ளனர்.


ராமநாதபுரம் பாராளுமன்றத் தேர்தலையொட்டி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்த வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்தது.  பாஜக கூட்டணி சார்பில் சுயேட்சையாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர், நவாஸ்  மற்றும் அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் உள்ளிட்டோர் இதுவரை மொத்தம் 56 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். 


இந்த நிலையில், இன்று ராமநாதபுரம் பாராளுமன்றத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ம.பன்னீர் செல்வம் என்பவர் தனது வேட்புமனுவை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் விஷ்ணு சந்திரனிடம் தாக்கல் செய்தார். இதுவரை ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 பேரும், ம.பன்னீர்செல்வம் பெயரில் ஒருவர் என மொத்தம் 6 பேர் வேட்புமனு தாக்கல் செய்தார்.


இதனால், முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் தவிர்த்து அதே ஓ.பி.எஸ் என்ற பெயரில் நான்கு பேரும், எம்.பன்னீர்செல்வம் என்ற பெயரில் ஒருவரும் தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் ராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தலில் பன்னீர்செல்வம் என்ற பெயரில் ஆறு பேர் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.