மக்களவை தேர்தலுக்கான தேர்தல் பரப்புரையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று முதல் தொடங்குகிறார். 


மக்களவை தேர்தல்


2024ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல், திருவிழா போல களைகட்டத் தொடங்கியுள்ளது. எங்கு திரும்பினாலும் வாக்கு சேகரிக்க ஒரு கூட்டம் இருப்பதை காண முடிகிறது. இந்தியாவில் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை வாக்குப்பதிவானது 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் 40 தொகுதிகளை கொண்ட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதல் கட்டமான ஏப்ரல் 19 ஆம் தேதியே வாக்குப்பதிவானது நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த மார்ச் 20 ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 


4 முனை போட்டி 


தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது. இதில் அதிமுக கூட்டணியில் தேமுதிக, எஸ்டிபிஐ, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் கூட்டணி வைத்துள்ளது. கடந்த முறை கூட்டணியில் இருந்த பாமக, பாஜக, தமாகா, தமமுக உள்ளிட்ட கட்சிகள் தனியாக கூட்டணி அமைத்துள்ளது. மக்களவை தேர்தலில் அதிமுக 33 இடங்களிலும், தேமுதிக 5 இடங்களிலும், எஸ்டிபிஐ ஒரு இடங்களிலும், புதிய தமிழகம் ஒரு இடங்களிலும் போட்டியிடுகிறது. 


எடப்பாடி பழனிசாமி பிரசாரம் 


இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் 33 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தார். இதில் நெல்லை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சிம்லா முத்துச்சோழன் நேற்று திடீரென மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக ஜான்சி ராணி அறிவித்தார்.  இதனைத் தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் தொடர்ச்சியாக மக்களிடம் வாக்கு சேகரிக்கும் படலம் தொடங்கி விட்டனர். 






இன்று பரப்புரையை தொடங்கும் அ.தி.மு.க.:


இதனிடையே திருச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார். இன்று மாலை 4 மணிக்கு திருச்சி நவலூர் குட்டப்பட்டு பகுதியில் உள்ள வண்ணாங்கோவில் அருகே திருச்சி வேட்பாளரை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பரப்புரை செய்கிறார். தொடர்ந்து மார்ச் 26 ஆம் தேதி மாலை 4 மணிக்கு தூத்துக்குடியிலும், இரவு 7 மணிக்கு திருநெல்வேலியிலும் பரப்புரை மேற்கொள்கிறார். 


கடந்த 2019 ஆம் ஆண்டு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராக மக்களவை தேர்தலை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, இம்முறை அதிமுக பொதுச்செயலாளராக தேர்தலை சந்திக்கிறார் என்பதால் இது சவால் நிறைந்த களமாக மாறியுள்ளது. இன்று நடக்கும் பொதுக்கூட்டத்தில் அதிமுக கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர். முன்னதாக சேலத்தில் இருந்து திருச்சிக்கு கிளம்பும்போது தன் வீட்டுக்கு அருகே மக்களிடம் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.