Jharkand ED Raid: ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் பல இடங்களில் அமலாக்கத்துறை, காலை முதலே சோதனை நடத்தி வருகிறது.


25 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல்:


பணமோசடி தடுப்புச் சட்டத்தின்  கீழ் நடத்தப்பட்ட சோதனைகள், ஜார்க்கண்ட் ஊரக வளர்ச்சித் துறையின் முன்னாள் தலைமைப் பொறியாளர் வீரேந்திர ராம் மற்றும் அவருடன் தொடர்புடைய 6 இடங்களில் நடைபெற்றது. அப்போது, ஜார்க்கண்ட் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஆலம்கிர் ஆலமின் தனிப்பட்ட செயலாளரான சஞ்சீவ் லாலின்,  வீட்டு உதவியாளருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் அறையில் இருந்து கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றது. மலைபோல் குவிக்கப்பட்டு இருந்த மொத்தமுமே, 500 ரூபாய் நோட்டுகள் தான். அதன் மதிப்பு 25 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. 70 வயதான ஆலம்கிர் ஆலம் காங்கிரஸ் தலைவராவார். ஜார்கண்ட் சட்டமன்றத்தில் பாகூர் தொகுதியை அவர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அம்மாநிலத்தில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது.






பாஜக குற்றச்சாட்டு:


கைப்பற்றப்பட்ட பணம் காங்கிரஸ் அமைச்சருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஜார்க்கண்ட் பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதுல் ஷாதேவ் பேசுகையில்,  "ஜார்கண்டில் ஊழல் முடிவடையவில்லை. தேர்தலின் போது கைப்பற்றப்பட்ட இந்த பணம், தேர்தலில் இந்த பணத்தை செலவழிக்கும் திட்டம் இருப்பதை குறிக்கிறது. இது குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார். 


அமலாக்கத்துறை குற்றச்சாட்டு:


பணமோசடி வழக்கு தொடர்பாக வீரேந்திர ராம் கடந்த ஆண்டு பிப்ரவரி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து ஏப்ரல் மாதம் வெளியிட்ட அறிக்கையில்,  ராஞ்சியில் உள்ள ஊரகப் பணித் துறையில் தலைமைப் பொறியாளராகப் பணிபுரிந்த வீரேந்திர குமார் ராம், ஒப்பந்ததாரர்களுக்கு டெண்டர்கள் ஒதுக்கப்பட்டதற்குப் பதிலாக கமிஷன் என்ற பெயரில் குற்றச் செயல்களில் ஈடுபட்டார். இவ்வாறு உருவாக்கப்பட்ட வருமானம் வீரேந்திர குமார் ராம் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களால் மிகவும் ஆடம்பரமான வாழ்க்கை வாழ பயன்படுத்தப்பட்டது" என குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. மேலும், அதிகாரியின் ரூ.39 கோடி மதிப்புள்ள சொத்துகளை  அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.