மக்களவை தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி பொது விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டது.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி முதல்கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டுக்கு முதல் கட்டத்திலேயே மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 26ஆம் தேதியும் 3ஆம் கட்டமாக மே 7ஆம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. நான்காம் கட்டத் தேர்தல் மே 13, 5ஆம் கட்டத் தேர்தல் மே 20 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. அதேபோல 6ஆவது கட்டத் தேர்தல் மே 26ஆம் தேதியும் கடைசியாக 7ஆம் கட்டத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதியும் நடைபெற உள்ளது.
18ஆவது மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் பணிகளில் 1.5 கோடி அதிகாரிகள் ஈடுபட உள்ளனர். 55 லட்சம் தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 10.5 லட்சம் வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்பட உள்ளன. வன்முறை இல்லாமல் மிகவும் அமைதியாக தேர்தலை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் போலி செய்திகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் 68,144 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.
இந்த முறை 96.88 கோடி பேர் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். புதிய வாக்காளர்கள் எண்ணிக்கை 2.63 கோடி ஆகும். அதேபோல முதல் தலைமுறை வாக்காளர்கள் 1.82 கோடி பேராக உள்ளனர் என்றும் தேர்தல் ஆணையர் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் 18ஆவது மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதன்படி வேட்பாளர்களும் அரசியல் கட்சிகளும் என்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது;
- அரசியல் கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள் கண்ணியத்துடன் பரப்புரையில் ஈடுபட வேண்டும்.
- 50,000 ரூபாய்க்கு மேல் ஆவணங்கள் இல்லாமல் பணம் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
- மத ரீதியாகவோ, தனிப்பட்ட முறையிலேயோ தாக்குதலில் ஈடுபடக்கூடாது.
- விளம்பரங்களை நம்பத்தகுந்த செய்தியாக்க முயற்சிக்க கூடாது.
- தேர்தல் பரப்புரையில் சிறார்களை பயன்படுத்தக்கூடாது.
- தன்னார்வலர்கள், ஒப்பந்தப் பணியாளர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளில் எந்த பாரபட்சமும் இருக்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பாரபட்சமாக செயல்படும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவார்கள்.
- மாநில எல்லைகள் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்படும்.
- வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கபடும்.
- முன் கூட்டியே அறிவிக்கப்படாத தனி விமானப் பயணங்கள் கண்காணிக்கப்படும்.
- பணப் பரிவர்த்தனை தொடர்பாக வருமான வரித்துறை, அமலாக்கத் துறையினர் தொடர்ந்து கண்காணிப்பார்கள்.
- பணம், பொருள்கள், மது விநியோகம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு தடுக்கப்படும். தவறு செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் செய்யலாம். ஆனால் போலி செய்திகளைப் பரப்பக் கூடாது.
- சமூக விரோதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை பாயும்.
- அரசியல் கட்சிகள் தங்கள் சமூக வலைதள பக்கங்களை கவனமாக கையாள வேண்டும்.
Also Read: The Happiest Country: உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல் ரிலீஸ்! இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?