கரூர் மாவட்டத்தில், கரூர் மாநகராட்சி, குளித்தலை, பள்ளப்பட்டி, புகழூர் ஆகிய 3 நகராட் சிகள், அரவக்குறிச்சி, புஞ்சைதோட்டக்குறிச்சி, புலியூர், உப்பிடமங்கலம், கிருஷ்ணராயபுரம்,  பழைய ஜெயங்கொண்டம், மருதூர், நங்கரவம் ஆகிய 8 பேரூராட்சிகளில் உள்ள 246 வார்டுகள் உள்ளன.



இதில் கரூர் மாநகராட்சி 22வது வார்டு மற்றும் 4 பேரூராட்சி வார்டுகளில் 4 வார்டுகள் என மொத்தம் 5 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால், மீதமுள்ள 241 வார்டுகளுக்கு கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவில் 76.34 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.



வாக்குப்பதிவு முடிவுற்ற நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 7 வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பப்பட்டன. மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள்  பூட்டி சீல் வைக்கப்பட்டு சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும்  மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பும்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



கரூர் மாநகராட்சி பகுதிகளில் பதிவான மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் திமுக, அதிமுக, பாஜக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் இப்பகுதியில் இடைவிடாது கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். 



நாளை காலை 8 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில் பிற்பகல் 2 மணிக்குள் முடிவுகள் தெரியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை அரசு கலைக்கல்லூரி, பள்ளப்பட்டி ஆண்கள் மேல்நிலை பள்ளி, அரவக்குறிச்சி அரசு பள்ளி, புஞ்சை தோட்டக்குறிச்சி அரசு பள்ளி, மாயனூர் அரசு கல்லூரி, குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, புலியூர் ராணி மெய்யம்மை பள்ளி என மொத்தம் 7 இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட உள்ளன.