நாகை மாவட்டத்தில் நாகை நகராட்சியில் 273 பேரும், வேதாரண்யம் 154 பேரும், கீழ்வேளூர் பேரூராட்சியில்  52 பேரும், வேளாங்கண்ணி பேரூராட்சியில் 67 பேரும், தலைஞாயிறு பேரூராட்சியில் 77 பேரும், திட்டச்சேரி பேரூராட்சியில் 62 பேரும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனுக்கள் பரிசீலனையிலின்போது ஒரு சில மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் வேட்பு மனுக்களை திரும்ப பெற நேற்று கடைசி நாளாகும்.  இதன்படி, நாகை நகராட்சியில் நேற்று 98 பேர் வாபஸ் பெற்றுக்கொண்டனர். ஒருவர் போட்டியின்றி தேர்வு  செய்யப்பட்டார்.




மீதம் உள்ள 35 வார்டில் 170 பேர் போட்டியிட உள்ளனர். வேதாரண்யம் நகராட்சியில் நேற்று 46 பேர் வாபஸ் பெற்றுக்கொண்டனர். 21 வார்டுகளில் 96 பேர் களத்தில் உள்ளனர். திட்டச்சேரி பேரூராட்சியில் 7 பேர் நேற்று வாபஸ் பெற்றுக்கொண்டனர். ஒருவரின் வேட்பு மனு தள்ளுபடி  செய்யப்பட்டது. 54 பேர் களத்தில் உள்ளனர். வேளாங்கண்ணி பேரூராட்சியில் 19 பேர் வாபஸ் பெற்றுக்கொண்டனர். 2 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து 46 பேர் போட்டியிட களத்தில் உள்ளனர்.  கீழ்வேளூர் பேரூராட்சியில் 2 பேர் நேற்று வாபஸ் பெற்றுக்கொண்டனர். 49 பேர் களத்தில் உள்ளனர்.  தலைஞாறு பேரூராட்சியில் 19 பேர் நேற்று வாபஸ் பெற்றுக்கொண்டனர். 58 பேர் களத்தில் உள்ளனர். ஆக மொத்தம் 116 வார்டுகளில் 473 பேர் போட்டியிட உள்ளனர்.




இந்த நிலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் நாகை நகராட்சியில் 36 வார்டுகளுக்கு  வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. இதில் 16வது வார்டு நம்பியார் நகர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த ESM.சுரேஷ் மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த யாரும் போட்டியிடாததால் ESM.சுரேஷ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக  அறிவிக்கப்பட்டது.




அதனைத் தொடர்ந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழை சுயேட்சை வேட்பாளர் சுரேஷுக்கு நகராட்சி ஆணையரும் தேர்தல் நடத்தும் அலுவலரான ஸ்ரீதேவி வழங்கினார். இதனையடுத்து  நம்பியார்நகர் கிராம மக்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மாலை அணிவித்தும், சால்வை  வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நாகப்பட்டினம் நகராட்சியில்  சுயேட்சை வேட்பாளர் ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடதக்கது.