தருமபுரி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் போட்டியிடும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் தருமபுரி கிழக்கு மாவட்ட பொருப்பாளர் தடங்கம் சுப்ரமணி தலைமையில் குமாரசாமிபேட்டையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக கொள்கை பரப்பு செயலாளரும், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி கலந்து கொண்டு, வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து, பிரச்சாரம் செய்தார்.

 



 

அப்போது பேசிய திண்டுக்கல் லியோனி, பொருமையாக திமுகவிற்காக உழைத்து கொண்டே இருந்தால் பதவியும், பொறுப்பும் தன்னை தேடி வரும், திமுக என்ற ஆலமரத்தின் கீழ் நின்றால் விழுதுகளாக தாங்கி பிடிக்கும் இயக்கம் திமுக மட்டுமே, ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும், திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என கூறுகின்றனர். ஆனால் திமுக  ஆட்சி பொறுப்பேற்ற 8 மாத காலத்தில் மக்களிடம் பெறப்பட்ட 5 லட்சம் மனுக்களில் 2 லட்சத்து 90 ஆயிரம் மனுக்கள் மீது தீர்வு கண்ட ஒரே முதல்வர் நம்முடைய முதல்வர்.




 

மேலும் பாஜகவும், அதிமுகவும் சேர்ந்து நின்றாலும் ஜீரோதான், தற்போதைய தேர்தலில் தனி தனியாக நின்றாலும் தமிழகத்தில் கிடைக்க போவது ஜீரோதான். ஆனால் தமிழகத்தில் என்றுமே தளபதி ஹீரோதான், தமிழகத்தில் இன்று நேற்று அல்ல பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்த இயக்கம் திமுக தான் என்றும், பெண்களுக்கு முதன் முதலாக வாக்குரிமை கொடுத்தது நமது தாய் கழகமான நீதி கட்சி என்றும், அதனையடுத்து பெண்களுக்கு சொத்துரிமையை சட்டமாக்கியது முத்தமிழறிஞர் கலைஞர் தான் என்றும், அதே போல் தற்போது பெண்களுக்கு அரசியியல் உரிமையை 50 சதவீதம் அளித்தது தற்போதைய தமிழக முதல்வர் என்று கூறினார்.

 



 

இந்தியாவிலேயே இல்லம் தேடி கல்வி திட்டத்தை அறிமுகபடுத்தியவர் தமிழக முதல்வர் தான் என்றும், அதே போல் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற நகை கடனையும் தள்ளுபடி செய்ததோடு, ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் மக்களை தேடி மருத்துவம் என்ற சீரிய திட்டத்தை முதன் முதலில் அறிமுகபடுத்தி அதை செயல்படுத்தியவர் தான் நமது தமிழக முதல்வர் என்று கூறிய அவர், மதத்தின் பெயரால் மக்களை பிரித்தாலும், பாஜகவையும், அதற்கு துணை போதும் அதிமுகவையும் இந்த தேர்தலில் பாடம் புகட்டுகின்ற தேர்தலாக இருக்க வேண்டும் என்று பேசினார். இந்த கூட்டத்தில் முன்னாள் எம்பி தாரை செல்வன், நகர பொறுப்பாளர் அன்பழகன், முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஜி.சேகர், திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.