தேனி மாவட்டத்தில் 6 நகராட்சிகளில் உள்ள 177 கவுன்சிலர் பதவிகள், 22 பேரூராட்சிகளில் உள்ள 336 கவுன்சிலர் பதவிகள் என மொத்தம் 513 கவுன்சிலர் பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 7 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 506 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதற்காக மாவட்டத்தில் 731 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளுக்கு பயன்படுத்த கணினி குலுக்கல் முறையில் 886 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள்  ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் சரிபார்க்கப்பட்டு ஆண்டிப்பட்டி பேரூராட்சியில் 2 சமுதாய கூடங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டு இருக்கின்றது.



அந்த சமுதாய கூடங்களில் இருந்து, தேர்தல் நடக்க உள்ள 6 நகராட்சி, 22 பேரூராட்சி அலுவலகங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் அவை அனுப்பி வைக்கப்பட்டன. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டன. நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அவை வைக்கப்பட்ட அறைக்கு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன. வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அனைத்து இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு இடத்திலும் ஆய்வாளர் தலைமையிலான 2 போலீசார் பணியில் இருக்கும் வகையில் சுழற்சி முறையில் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.



 


அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் மாநகராட்சி, பழனி, ஒட்டன்சத்திரம் மற்றும் கொடைக்கானல் ஆகிய 3 நகராட்சிகள், 23 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றில் உள்ள 486 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில் ஒட்டன்சத்திரம் நகராட்சி, 5 பேரூராட்சிகளில் மொத்தம் 8 பேர் வார்டு கவுன்சிலர்களாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதனால் 478 பதவிகளுக்கான  தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இதையொட்டி 894 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 894 கட்டுப்பாட்டு எந்திரங்கள் வாக்குச்சாவடி வாரியாக ஒதுக்கப்பட்டுள்ளன.




மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பொருத்துவதற்காக வேட்பாளர் பெயர், சின்னங்கள் குறித்த படிவங்கள் அச்சடிக்கப்பட்டு ஒட்டும்  பணி தொடங்கி  நடைபெற்று வருகிறது. அவை அச்சடித்து வந்த பின்னர், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தி சரிபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். வருகிற 19-ந்தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளதால், 18-ந்தேதி வாக்குப்பதிவு எந்திரங்கள் நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் இருந்து அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு எடுத்துச் செல்லப்படும்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்