Katchatheevu: கச்சத்தீவு விவகாரத்தில் 2015 மற்றும் 2024ம் ஆண்டுகளில் வழங்கப்பட்ட, ஆர்டிஐ தொடர்பான பதில்களில் பல முரண்பாடுகள் இருப்பது தெரிய வந்துள்ளது. 


தேர்தலும் - கச்சத்தீவு விவகாரமும்:


நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைகள் அனல் பறக்க தொடங்கியுள்ளன. ஒவ்வொரு கட்சிகளும் சரமாரியாக குற்றச்சாட்டுகளையும், விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றன. முதற்கட்டமாக தம்ழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், கச்சத்தீவு விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்திரா காந்தி தலைமையிலான அரசு கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக்கொடுத்தது தொடர்பாக, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை ஆர்டிஐ மூலம் பல்வேறு தகவல்களை பெற்று வெளியிட்டார். இதுதொடர்பான செய்திகளை குறிப்பிட்டு, காங்கிரஸ் மற்றும் திமுகவை பிரதமர் மோடி கடுமையாக சாடி இருந்தார். வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் செய்தியாளர்களை சந்தித்து, கச்சத்தீவை விட்டுக்கொடுத்தது தவறு என பல்வேறு விளக்கங்களை வழங்கினார்.


காங்கிரஸ் - திமுக செய்தது துரோகமா?


அண்ணாமலை வெளியிட்ட ஆர்டிஐ பதிலில், மறைந்த பிரதமர்களான நேரு மற்றும் இந்திரா காந்தி ஆகியோர், கச்சத்தீவை தக்கவைத்துக் கொள்வதில் எந்த ஆர்வமும் காட்டவில்லை. ரகசிய பேச்சுவார்த்தைகள் மூலம், 1974ல் தீவை விட்டுக் கொடுப்பது தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டன. எதிர்க்கட்சிகள் உடன்  கலந்தாலோசிக்காமல் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி பெரிய எதிர்ப்புகள் எதுவும் தெரிவிக்காமல் ஒப்புதல் வழங்கினார்” என்பன போன்ற தகவல்கள் இடம்பெற்றுள்ளன.






2015 ஆர்டிஐ சொல்வது என்ன?


இந்நிலையில் தான், கச்சத்தீவு விட்டுக் கொடுக்கப்பட்டது ஏன் என்பது தொடர்பாக, 2015ம் ஆண்டு எழுப்பப்பட்ட ஆர்டிஐ கேள்விக்கு வெளியுறவு அமைச்சகம் சொன்ன பதில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 2015ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி பெறப்பட்ட அந்த பதிலில், ” கச்சத்தீவு தீவு இந்தியா-இலங்கை கடல் எல்லைக்கோட்டில் இலங்கையின் பக்கத்தில் உள்ளது,  கேள்விக்குரிய இந்த பகுதி ஒருபோதும் வரையறுக்கப்படாத நிலையில், இந்தியாவுக்குச் சொந்தமான நிலப்பரப்பை கையகப்படுத்தியது அல்லது விட்டுக்கொடுத்தது போன்ற எந்த நிகழ்வுகளும் இதில் இல்லை. ஒப்பந்தங்களின்படி, கச்சத்தீவு இந்தியா-இலங்கை இடையேயான கடல்சார் எல்லைக் கோட்டின் இலங்கைப் பகுதியில் அமைந்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கச்சத்தீவின் அமைவிடமே இலங்கையின் எல்லையில் தான் உள்ளது என வெளியுறவுத்துறை தெரிவித்துளது. இந்த பதில் பெறப்பட்டப்போது, வெளியுறவுத்துறையின் செயலாளராக இருந்தது, தற்போதைய வெளியுறவு அமைச்சரான ஜெய்சங்கர் தான் என்பது குறிப்பிடத்தகக்து.


எதிர்க்கட்சிகள் சாடல்:


கச்சத்தீவு விவகாரத்தில் விட்டுக் கொடுத்தது போன்ற நிகழ்வுகள் ஏதும் இல்லை என 2015ல் சொன்ன வெளியுறவுத்துறை, தற்போது 2024ல் கச்சத்தீவு இந்தியாவின் சொத்து என உரிமை கொண்டாடுவது ஏன் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளன. கச்சத்தீவு விவகாரத்தை தவறாக பயன்படுத்தி, தமிழகத்தில் வாக்குகளை அறுவட செய்ய பாஜக திட்டமிடுவதாகவும் குற்றம்சாட்டுகின்றன. தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடி நாடகமாடுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் சாடியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் கச்சத்தீவை மீட்காமல் பாஜக செய்தது என்ன எனவும் காங்கிரஸ் தலைவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.