கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 1,66,816 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி.


கரூர் தொகுதி வாக்கு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 5,34,906 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தங்கவேல் 3,68,090 வாக்குகளும், பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் 1,02,482 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கருப்பையா 87,503 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி அதிமுக வேட்பாளர் தங்கவேலுவை 1,66,816 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். நோட்டாவுக்கு 8,174 பேர் வாக்களித்துள்ளனர். தபால் வாக்குகள் உட்பட மொத்தம் 11,25,359 வாக்குகள் பதிவாகியுள்ளன.


 




இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி - பொய் பிரச்சாரங்களை மீறி கரூர் தொகுதி மக்கள் எனக்கு மகத்தான வெற்றியை கொடுத்துள்ளார்கள் என ஜோதிமணி பேட்டி.


கரூர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஜோதிமணி தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தங்கவேலுவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். கரூர் அடுத்த தளவாபாளையம் வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்து, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கவேலுவிடம் வெற்றி சான்றிதழ் பெற்றார். அதனை தொடர்ந்து கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் காமராஜர் சிலைகளுக்கு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தார். அப்போது திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து சால்வை அணிவித்து அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


 




தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி,


1 லட்சத்து 65 ஆயிரத்து 620 வாக்குகள் வித்தியாசத்தில் கரூர் தொகுதி மக்கள் எனக்கு மகத்தான வெற்றியை தந்துள்ளார்கள். கடந்த ஓராண்டாக பணம் செலவு செய்து என் மீது தொடர்ந்து பொய் பிரச்சாரம் நடத்தப்பட்டது. அத்தனையும் மீறி வெற்றி பெற்றுள்ளேன். ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகி உள்ளன. நிச்சயமாக இந்தியா கூட்டணி தான் மத்தியில் ஆட்சி அமைக்கும். இதுவரை மோடி அரசுக்கு எதிராக போர் நடத்தினோம். நாளை முதல் மத்தியில் ஆட்சி அமைப்பதற்காக போராட இருக்கிறோம் என்று தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து கார் மூலம் சென்னை புறப்பட்டார்.


 




கரூர் பாராளுமன்றத் தேர்தலில் வேட்பாளர் அறிவித்தது முதல் வெற்றி பெறும் வரை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் இடைவிடாது தங்களது தேர்தல் பணி ஆற்றியதன் மூலம் இந்த வெற்றி கிடைத்துள்ளது என திமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இளங்கோ, கிருஷ்ணாபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி மற்றும் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் துணை மேயர் தாரணி சரவணன் உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாலு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜோதிமணி வெற்றி கொண்டாட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் ஒரே வாகனத்தில் வழுநெடுகிலும் அவருக்கு மலர் தூவி வரவேற்பு அளித்தனர்.


இன்னல்கள் நிறைந்த இந்த நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி சான்றிதழ் பெற்றவுடன் உடனடியாக வேட்பாளர் ஜோதிமணி கார் மூலம் சில திமுக நிர்வாகிகளுடன் கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா திருவுருவ சிலைக்கும் அதன் அருகே உள்ள காமராஜர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து விட்டு உடனிருந்து நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து விட்டு மீண்டும் கிளம்பினார்.