நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கரூர் மாவட்டத்தில் உள்ள   கரூர் மாநகராட்சி,  3 நகராட்சிகள், 8 பேரூராட்சிகளை ஒட்டுமொத்தமாக திமுக பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ளது.  கரூர் மாநகராட்சியைப் பொறுத்தவரை மொத்தம் உள்ள 48 வார்டுகளில், 43  இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது.   காங்கிரஸ் 2 இடத்திலும்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1 இடத்திலும், அதிமுக 2 இடங்களிலும் வெற்றி பெற்றன.



கரூர் மாநகராட்சியின் மேயர் பதவி பொதுப்பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கரூர் மாநகராட்சியில் திமுக சார்பில் 22 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.  போட்டியிட்ட அனைத்து பெண் வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். இதையடுத்து முதல் பெண் மேயர் யார் என பலராலும் பரபரப்பாக கடந்த சில நாள்களாக பேசப்பட்டு வந்தற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.




கரூர் மாநகராட்சியின் மேயராக வேட்பாளராக கவிதா கணேசன்.  அறிவிக்கப்பட்டார். எம்எஸ்சி., பிஎட் படித்துள்ள கவிதா கணேசன்  ஏற்கெனவே நகர்மன்றத் தலைவராக இருந்தவர். இனாம் கரூர் நகராட்சியின் தலைவராக 5 ஆண்டு காலம் இருந்த அனுபவம் உள்ளவர்.  இவரது கணவர்  கணேசன்.  இலக்கியத் திறமையுடன் பேசக் கூடிய  திமுக தலைமைக் கழக பேச்சாளர். கலைஞருடன் நெருக்கமானவர். கலைஞரே பல வெளியூர், வெளி மாநில திமுக நிகழ்ச்சிகளுக்கு கரூர் கணேசனை கலந்து கொள்ளச் செய்து பெருமைபடுத்தியவர்.  கலைஞர் போலவே  இப்போது, முதல்வர் ஸ்டாலினும் கரூர் கணேசனுடன் அன்பு பாராட்டி வருகிறார்.  



கரூர் மாநகராட்சியில் இன்று மேயர் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில்  மாநகராட்சியின் மேயர் தேர்தலில் திமுகவை சேர்ந்த கவிதா கணேசன் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அதனால் போட்டியின்றி அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். மாநகராட்சி ஆணையர்  ரவிச்சந்திரன் புதிய பெண் மேயரை அழைத்து கொண்டு மேயர் அலுவலகத்தில் உள்ள அமர வைத்தனர்.


பின்னர் கரூர் மாநகராட்சியில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்று மாமன்ற உறுப்பினர்களும், திமுக நகரக் கழகச் செயலாளர்களும், திமுக மாவட்ட நிர்வாகிகளும், புதிய மேயரின் குடும்ப உறுப்பினர்களும் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களும், கவிதா மேயரின் கணவர் கணேசனும், மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் மணிராஜ் மற்றும் புதிய மேயரின் மகன் மற்றும் மகள் உடனிருந்தனர்.




இன்று நடைபெற்ற மறைமுக தேர்தலில் இரண்டு அதிமுக மாமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். துணை மேயர் தேர்தல் மதியம்  தொடங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.