காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் க. செல்வம் வாலாஜாபாத் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் 


மக்களவைத் தேர்தல்


மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, முக்கிய அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.‌ கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரம் களைகட்ட துவங்கி உள்ளது. அந்த வகையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில், திமுக வேட்பாளர் க. செல்வம் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாலாஜாபாத் ஒன்றிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.




200 கிலோ எடை மாலை


வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஈஞ்சம்பாக்கம், புதுப்பாக்கம், வேளியூர், கோவிந்தவாடி, படு நெல்லி, புரிசை, வளத்தூர், பரந்தூர், சிறுவாக்கம், காரை உள்ளிட்ட முப்பதற்கும் மேற்பட்ட பகுதிகளில் வாகன பரப்புரையில் ஈடுபட்டார். முன்னதாக படுநெல்லி பகுதியில் கிரேன் மூலம் சுமார் 30 அடி உயர உள்ள  200 கிலோ எடை மாலையை கிரேன் உதவியுடன் வேட்பாளருக்கு அணிவித்து உற்சாக வரவேற்பை அளித்தனர். தொடர்ந்து வேட்பாளருக்கு தெருக்கூத்து கலைஞர்கள் நடனமாடி, வேட்பாளரை வரவேற்றது மட்டுமில்லாமல் நூதன முறையில் உதயசூரியன் சின்னத்திற்கு தெருக்கூத்து கலைஞர்கள் மூலம் வாக்குகளை சேகரித்தனர். தொடர்ந்து காரை கிராமத்தில், வேட்பாளருக்கு இரண்டு ஜேசிபி மூலம் 150 கிலோ எடையுள்ள ரோஜா பூக்களை தூவி, பூ மழை மூலம் வேட்பாளருக்கு வரவேற்பு அளித்தனர்.


 




தொடர்ந்து திமுக கலரில் காகிதப்பூ மழையும் பெய்தது. மேலும் 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தில் வந்த கூட்டணி கட்சியினர் மற்றும் திமுக தொண்டர்கள் வேட்பாளருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை கேட்டனர்.


சுகர் பேஷண்ட்


தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் பேசிய வேட்பாளர் க. செல்வம், திமுக அரசு இரண்டு ஆண்டுகளில் ஏராளமான சாதனைகளை செய்துள்ளது. மகளிர் உரிமைத் தொகை, காலை சிற்றுண்டி உள்ளிட்ட மக்கள் நல திட்ட பணிகளை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் செய்து வருகிறார். தற்பொழுது பிரதமர் தேர்தல் என்பதால் இந்தியா கூட்டணியை சேர்ந்த ஒருவர் பிரதமராக நீங்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும். பத்தாண்டுகளாக மோடி இந்தியாவிற்கு எதுவும் செய்யவில்லை, கேஸ் மானியம் தற்பொழுது வழங்கப்படுவதே இல்லை ஆனால் இந்தியா கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் விலை 500 ரூபாய்க்கு குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து நேரமாகிக் கொண்டிருக்கிறது வாகனத்தில் இருப்பவர்கள் எல்லாம் " சுகர் பேஷண்ட் " நீங்களும் சென்று சீக்கிரம் சாப்பிடுங்கள் என தெரிவித்து அங்கிருந்து சென்றார் .







தொடரும் பிரச்சாரங்கள் 


தொடர்ந்து காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் முக்கிய அரசியல் கட்சியினர் பல்வேறு வழிகளில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.‌ வேட்பாளர்கள் பிரச்சாரத்தை தவிர்த்து, வேட்பாளருக்கு ஆதரவாக கூட்டணி கட்சியினர் மற்றும் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருவது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதுபோக நிர்வாகிகள் வீடு தோறும் சென்று துண்டு பிரசுரங்களை வழங்கியும் பிரச்சாரத்தை தீவிர்படுத்தி உள்ளனர். தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், இறுதி நேர பிரச்சாரத்திற்கும் அரசியல் கட்சியினர் தயாராகி வருகின்றனர். இதனால் காஞ்சிபுரம் தொகுதி முழுவதும் தேர்தல் திருவிழா களைகட்ட துவங்கி உள்ளது. இதுபோக இரவு நேரங்களில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், முக்கிய அரசியல் கட்சி சார்பில் பிரச்சார பொதுக்கூட்டங்களும் நடைபெற்று வருகிறது. பிரச்சார பொதுக்கூட்டங்களில் பிரதான கட்சியை சார்ந்த நட்சத்திர பேச்சாளர்கள், கட்சித் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.