Kamal Haasan: கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான அரசின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் நிறைவு பெறுகிறது.
7 கட்டங்களாக நடத்தப்படும் மக்களவை தேர்தல்:
இப்படிப்பட்ட சூழலில், புதிய அரசை தேர்வு செய்யும் நோக்கில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறையை போன்று, இந்த தடவையும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.
முதற்கட்ட நாடாளுமன்ற தேர்தல், வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதியும் இரண்டாம் கட்ட நாடாளுமன்ற தேர்தல், ஏப்ரல் மாதம் 26ஆம் தேதியும் நடைபெறுகிறது. மூன்றாம் கட்ட தேர்தல், மே மாதம் 7ஆம் தேதியும் நான்காம் கட்ட தேர்தல், மே மாதம் 13ஆம் தேதியும் நடக்க உள்ளது.
மே மாதம் 20ஆம் தேதி ஐந்தாம் கட்ட தேர்தலும், மே மாதம் 25ஆம் தேதி 6ஆம் கட்ட மக்களவை தேர்தலும் கடைசி கட்டமான 7ஆம் கட்ட தேர்தல் ஜூன் மாதம் 1ஆம் தேதியும் நடத்தப்பட உள்ளது. ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுவது குறித்து பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தேர்தல் ஆணையம் மீது கமல் விமர்சனம்:
குறிப்பாக, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உத்தர பிரதேசம், பீகார், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. ஆளுங்கட்சிக்கு சாதகமாகவே இப்படி நடத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், இதுகுறித்து விமர்சித்துள்ளார். ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை அமல்படுத்துவதற்கு முன்பு ஒரு கட்டமாக தேர்தல் நடத்தும் முறையை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
எக்ஸ் வலைதளத்தில் இதுதொடர்பாக குறிப்பிடுகையில், "ஒரே நாடு, ஒரே தேர்தலை அமல்படுத்த முயற்சி மேற்கொள்வதற்கு முன், ஒரே கட்டமாக தேர்தலை நடத்த ஏன் முயற்சிக்க கூடாது?" என பதிவிட்டுள்ளார்.
மக்களவைக்கும் நாடு முழுவதும் உள்ள சட்டப்பேரவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய பாஜக அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கான, முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்நிலை குழு மத்திய அரசு கடந்தாண்டு அமைத்தது.
பொது மக்கள், அரசியல் கட்சிகள், சட்ட ஆணையம் என சம்பந்தப்பட்ட அனைவரிடமும் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்நிலை குழு கருத்துக் கேட்டு, அறிக்கை ஒன்றை தயார் செய்தது. குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் அந்த அறிக்கையானது சமீபத்தில் சமர்பிக்கப்பட்டது.