விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல் கடந்த 6 மற்றும் 9ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக நடந்தது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 12ஆம் தேதியன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. விழுப்புரம் மாவட்டத்தில் 28 மாவட்ட கவுன்சிலர், 293 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 666 கிராம ஊராட்சி தலைவர், 4,719 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என 5,706 பேர் கடும் போட்டி மூலமும், 22 கிராம ஊராட்சி தலைவர்கள், 369 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றியும் வெற்றி பெற்றனர். இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் பதவியேற்று கொண்டனர்.



இந்நிலையில் மாவட்டத்தில் 13 ஒன்றியங்களை உள்ளடக்கிய ஒரு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர், ஒரு துணைத்தலைவர், 13 ஒன்றியக்குழு தலைவர்கள், 13 துணைத்தலைவர்கள் மற்றும் 688 கிராம ஊராட்சி துணைத்தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் இன்று காலை 10 மணிக்கு நடக்கிறது. மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட ஊராட்சிக்குழு அலுவலகத்திலும், ஒன்றியக்குழு தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் மாவட்டத்தில் உள்ள அந்தந்த 13 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், கிராம ஊராட்சி துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது.


இத்தேர்தலில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர், துணைத்தலைவரை மாவட்ட கவுன்சிலர்களும், ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவரை அந்தந்த ஒன்றியத்தில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களும், கிராம ஊராட்சி துணைத்தலைவரை அந்தந்த கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களும் மறைமுகமாக வாக்களித்து தேர்வு செய்ய உள்ளனர். இதையொட்டி தேர்தல் நடைபெறும் அலுவலகங்கள் முன்பு போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.




இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 17 மாவட்ட கவுன்சிலர், 177 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 383 கிராம ஊராட்சி மன்ற தலைவர், 2,708 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என 3,285 பேர் கடும் போட்டி மூலமும், 2 மாவட்ட கவுன்சிலர்கள், 3 ஒன்றிய கவுன்சிலர்கள், 29 ஊராட்சி மன்ற தலைவர்கள், 454 கிராம ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் போட்டியின்றி ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றனர். இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம்  பதவியேற்று கொண்டனர்.  இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 9 ஒன்றியங்களை உள்ளடக்கிய ஒரு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர், ஒரு மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர், 9 ஒன்றியக்குழு தலைவர், 9 ஒன்றியக்குழு துணைத்தலைவர் மற்றும் 412 கிராம ஊராட்சி மன்ற துணை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் இன்று  காலை 10 மணிக்கு நடக்கிறது.


மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர், துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கிலும், ஒன்றியக்குழு தலைவர், ஒன்றியக்குழு துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் மாவட்டத்திலுள்ள அந்தந்த 9 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், கிராம ஊராட்சி மன்ற துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் நடைபெறும் அலுவலகங்கள் முன்பு போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.