TVK Vijay: மக்கள் பணத்தில் ஒரு பைசா தொடமாட்டேன்.. ஓட்டு போடுங்க.. நெல்லையில் விஜய் உறுதி!
TVK Vijay Campaign: 234 தொகுதிகளிலும் இந்த விஜய் தான் வேட்பாளர் என சொன்னேன். இத்தனை வருடம் யார் யாருக்கோ ஓட்டு போட்டீர்கள். இப்போது உங்கள் வீட்டில் இருக்கும் ஒருவருக்கு ஓட்டு போடுங்கள் என தவெக தலைவர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.

காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் போல யாரும் வரமாட்டார்களா என எண்ணியவர்களுக்காக தவெக வந்துள்ளது என நெல்லையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் விஜய் தெரிவித்துள்ளார்.
நெல்லை கேடிசி நகரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய விஜய், “உங்கள் விஜய்.. உங்களை தேடி வந்திருக்கிறேன். இந்நேரம் திமுக கையில் அந்த முழு பவர் இருந்திருந்தால் கண்டிப்பாக இந்த நிகழ்ச்சி நடந்திருக்காது. ஏதாவது ஒரு முட்டுக்கட்டையை மு.க.ஸ்டாலின் போட்டியிருப்பார். இப்போது அவர் அதிகாரம் இல்லாத முதலமைச்சராக இருக்கிறார். இந்த திமுக அரசு நமக்கு எவ்வளவு பிரச்னைகள் நெருக்கடிகள், அவதூறுகள் பரப்பினார்கள். திமுக, பாஜக வெளியில் தனித்தனியாக இருந்தாலும் உள்ளுக்குள் இவர்கள் இரண்டு பேரும் ஒன்று தான். இவர்கள் இரு கட்சியின் நோக்கம் ஒன்று தான். அதாவது உங்களுடன் நிற்கும் விஜய் வந்து விடக்கூடாது என்பது தான். நான் அவர்கள் செய்த ஊழலை லிஸ்ட் போட்டு சொன்னதால் செம கோபத்தில் இருக்கிறார்கள்.
அடுத்ததாக ஆட்சி வரமுடியாத சூழலை மக்கள் நீங்கள் உருவாக்கி விட்டீர்கள். கொள்ளையடிக்கும் பணத்தை வைத்து திமுக கல்லாப்பெட்டி கூட்டணியை உருவாக்கினார்கள். ஆனால் அங்கு கூட்டணி கட்சியினரே ஒருவருக்கொருவர் ஓட்டு கூட போட முடியாத சூழல் உள்ளது. அதேநிலை பாஜகவிலும் உள்ளது. அதனால் திமுக, பாஜகவுக்கு நம்ம மேல கோபம் உள்ளது. அந்த கோபம் காரணம் அவர்கள் வீட்டில் விசில் சத்தம் கேட்குது என்பது தான்.
இது ஒரு பூர்வ ஜென்ம பந்தம். எனக்கு ஒன்னுன்னா மக்களுக்குக்கும், அவர்களுக்கு ஒன்னுன்னா எனக்கும் கண்கள் கலங்கும். கரூர் விஷயத்தில் என்மீது பழி போட்டார்கள் எடுபடவில்லை. ஜனநாயகன் படத்தை முடக்கினார்கள். விஜய்க்கு மட்டும் தனியாக நிபந்தனைகள் விதித்தார்கள். ஒரு மாதம் முன்பு கூட அவதூறு பரப்பினார்கள். 234 தொகுதிகளிலும் இந்த விஜய் தான் வேட்பாளர் என சொன்னேன். இத்தனை வருடம் யார் யாருக்கோ ஓட்டு போட்டீர்கள். இப்போது உங்கள் வீட்டில் இருக்கும் ஒருவருக்கு ஓட்டு போடுங்கள். இப்படியான உணர்வுப்பூர்வமான தேர்தலை இந்தியாவே பார்த்திருக்காது.
காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் போல யாரும் வரமாட்டார்களா என எண்ணியவர்களுக்காக தவெக வந்துள்ளது. ஒட்டுமொத்த தமிழ்நாடு மண்ணுக்கும் தவெக உழைக்கும். இந்த தேர்தலில் தவெக ஆட்சியை அமைக்கிறோம். பெண்கள், இளைஞர்கள், மீனவர்கள், உழைக்கும் மக்கள் எல்லாரும் நல்லாருப்போம். நம்முடைய எதிர்கால சந்ததியினரும் நல்லாருப்போம். வேறு யாருக்கும் ஓட்டு போடாதீங்கன்னு சொல்றோம்.
மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசா கூட தொட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. என்னை எதிர்ப்பவர்களால் இதனை தில்லா சொல்ல முடியுமா?. இந்த தேர்தலில் பணத்தை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. இது மாற்றத்துக்கான தேர்தல். ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களும் அதனைக் கொண்டு வருவார்கள். ஏப்ரல் 23ம் தேதி உங்கள் வாக்குகளை விசில் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். அத்தனை வலிகளையும் தாங்கிக்கொண்டு அனைத்து வசதிகளையும் விட்டு விட்டு நன்றிக்கடன் செலுத்த வந்திருக்கிறேன். உங்கள் பிள்ளைக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள்” என விஜய் தெரிவித்தார்.




















