சேலத்தில் திமுக வேட்பாளர் செல்வகணபதியை ஆதரித்து திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியது, "உதயசூரியன் சின்னத்திற்கு நீங்கள் போடும் ஓட்டு மோடிக்கு போடும் வேட்டு. கொரோனா காலத்தில் ஒரு கையில் விளக்கு புடிங்க, ஒரு கையில் மணி ஆட்டுங்க. கொரோனா வைரஸ் பயந்து ஓடிரும் என்றார் மோடி. ஓடுச்சா? கருப்பு பணத்தை ஒழித்து ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் போடுவேன் என்றார்; 15 பைசாவாவது போட்டாரா? சேலத்தில் நடந்த இளைஞரணி மாநாடு 100 சதவீதம் வெற்றி அல்ல; அது 80 சதவீதம் வெற்றிதான் - 40க்கு 40 வெற்றி பெற்றால் தான் இளைஞரணி மாநாடு வெற்றி பெற்றதாகும். கருணாநிதி வழியில் ஸ்டாலினும் சொல்வதைதான் செய்வார், செய்வதைதான் சொல்வார்.
கடந்த 3 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட சில திட்டங்களை பட்டியலிட்டு சில வாக்குறுதிகளை குறிப்பிட்டு பேசினார். திமுக தேர்தல் அறிக்கையை காங்கிரஸும் சொல்லி உள்ளது. மோடி சுட்ட வடையை அவரே சாப்பிட்டு விடுவார். கேஸ் விலையை 800 ஏற்றி விட்டு தேர்தல் நேரத்தில் 100 ரூபாய் குறைக்கிறார். ஆனால் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் சிலிண்டர் விலை 500, பெட்ரோல் விலை 75, டீசல் விலை 65, அனைத்து டோல்கேட்களும் அகற்றப்படும். சேலத்தில் 10 இடங்களில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் முதல்வர் அனைவருக்கும் நிறைய செய்துள்ளார். யார் காலில் விழுந்தும், தவழ்ந்து போயும் ஸ்டாலின் முதல்வராகவில்லை. ஆதனால்தான் சொன்னதை எல்லாம் அவர் செய்தார். அனைவரும் சமம் என்பதுதான் திராவிட மாடல் அரசு. சேலத்தில் மட்டும் பிங்க் பஸ் மூலம் மகளிர்கள் 20 கோடி பயணங்கள் சென்றுள்ளனர். நாடு முழுவதும் 24 சதவீதம் பெண்கள் மட்டுமே படித்து விட்டு வேலைக்கு போகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் 54 சதவீதம் பெண்கள் படித்து விட்டு வேலைக்கு போகிறார்கள். இதை அதிகரிக்க திமுக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டை பார்த்து கனடாவில் காலை உணவு திட்டத்தை துவங்கி உள்ளனர். இந்தியா மட்டுமல்ல உலகத்திற்கே முன்மாதிரியாக தமிழ்நாடு உள்ளது.
மேலும், தகுதி உள்ள அனைத்து மகளிருக்கும் கட்டாயம் மகளிர் உரிமை தொகை கிடைக்கும். சேலத்தில் 5.60 லட்சம் மக்கள் பயன் பெற்று வருகிறார்கள். தேர்தல் என்பதால்தான் மோடி அடிக்கடி தமிழ்நாடு வருகிறார். அடுத்த 10 நாட்கள் மோடி தமிழ்நாட்டில் தங்கினாலும் ஒரு இடத்தில் கூட பாஜகவால் வெற்றி பெற முடியாது. பிரதமர் மோடியின் பெயர் மிஸ்டர் 29 பைசா. ஒன்றிய பாஜகவிற்கும், துணை நின்ற அதிமுகவிற்கும் இந்த தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும். ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை தமிழ்நாட்டில் நீட் தேர்வு வரவில்லை. அவர் இறந்ததும் அடிமை கூட்டத்தை வைத்து தமிழ்நாட்டில் நீட் தேர்வை நுழைத்து விட்டார்கள்.
தமிழ் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சிக்கு கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் 1 ரூபாயை கூட ஒதுக்கவில்லை. மதுரையில் பிரதமரும், எடப்பாடி பழனிச்சாமியும் நட்டு வைத்த எய்ம்ஸ் கல்லை நான் தூக்கிட்டு வந்துட்டேன். மருத்துவமனையை கட்டினால்தான் கல்லை திருப்பி தருவேன். யார் பிரதமர் என்பது எங்களுக்கு முக்கியம் அல்ல! யார் பிரதமராக கூடாது என்பதுதான் முக்கியம். நான் வெறும் கல்லைதான் காட்டினேன். எடப்பாடி பழனிச்சாமி பல்லை காட்டுகிறார். டூத் பேஸ்ட் விளம்பரம் போல பல்லை காட்டுகிறார்கள். அமைதிபடை படத்தில் வரும் அம்மாவாசை போல சிரிக்கிறார். எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி முடித்தால் நான் ஏன் கேள்வி கேட்க போகிறேன்” எனத் தெரிவித்தார்.