Erode East Bypoll: ஈரோடு கிழக்கு தேர்தலில் தங்களது பலத்தை காட்ட, அதிமுகவினர் புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்:
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 5ம் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என, அதிமுக, தேமுதிக, பாஜக போன்ற பிரதான கட்சிகள் அறிவித்துள்ளன. திமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சைகள் என 65 பேர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர். பரிசீலனைக்குப் பிறகு 46 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி ஆகியோரும் அடங்குவர். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
சீமானின் டார்கெட்:
வழக்கமாக தமிழக அரசியல் களத்தில் திமுக Vs அதிமுக என்ற இருமுனைப்போட்டியே நிலவும். ஆனால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தும் புறக்கணித்துள்ளதால், களநிலவரம் திமுக Vs நாதக என்ற புதிய இருமுனைப்போட்டியாக உருவெடுத்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி வெற்றி பெறாவிட்டாலும், இரண்டாவது இடத்தையாவது பிடித்து விட வேண்டுமென நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டமிட்டு வருகிறார்.
அதன்படி, கடந்த 2023ம் ஆண்டு நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர், 10 ஆயிரம் வாக்குகள் அதாவது சுமார் 6 சதவிகித வாக்குகளை பெற்றார். ஆனால், இந்த முறை அதிமுக போன்ற மற்ற கட்சிகளின் திமுக எதிர்ப்பு வாக்குகளையும், தங்கள் பக்கம் ஈர்க்க பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். இதன் மூலம் வாக்கு சதவிகிதத்தை இரட்டை இலக்கமாக உயர்த்தி, 2026ம் ஆண்டு பொதுத்தேர்தலுக்காக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே ஊக்கத்தை ஏற்படுத்தலாம் என கருதுகிறார்.
தனி டிராக்கில் அதிமுக?
இந்த சூழலில் தான் தங்களுக்கு கிடைக்காத வாக்குகள் வேறு எந்த கட்சிக்கும் செல்லக்கூடாது என, ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுகவினர் திட்டமிடுவதாக கூறப்படுகிறது. அதன்படி, அந்த தொகுதியில் உள்ள தங்களது நிரந்தர வாக்கு வங்கியை மொத்தமாக, நோட்டா பக்கம் திருப்ப அதிமுக நிர்வாகிகள் வேலை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்மூலம், அதிமுகவின் வாக்கு வங்கி எப்போதுமே அதிமுகவிற்கே பலனளிக்கும், அதனை எந்த ஒரு கட்சியாலும் பிரிக்கவோ, உடைக்கவோ முடியாது என வலியுறுத்தவே அதிமுகவினர் இந்த முடிவு எடுத்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் அதிமுக வாக்குகளை தங்கள் பக்கம் ஈர்க்கலாம் என்ற சீமானின் திட்டம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பலிக்காது என்ற சூழல் நிலவுகிறது.
சித்தப்பா கட்சியால் சீமான் வேதனை:
ஈரோடு கிழக்கு தேர்தலில் திமுக எதிர்ப்பு வாக்குகளை அறுவடை செய்ய வேண்டும் என்பதே சீமானின் மற்றொரு இலக்கு. ஆனால், அதே ஈரோடு மண்ணில் பிறந்து தமிழகத்தின் முற்போக்கு சித்தாந்தத்தின் தந்தையாக கருதப்படும், பெரியாரை சீமான் மிகவும் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனால், கடந்த தேர்தலை காட்டிலும் இந்த முறை நாதகவின் வாக்கு சதவிகிதம் குறையவே அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நேரத்தில் தான், சீமான் செல்லமாக சித்தப்பா என அழைத்து வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான, அதிமுகவும் நாம் தமிழர் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இதனால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரண்டாவது இடத்தை பிடிக்க வேண்டும் என்ற சீமானின், கனவு கனவாகவே நீர்த்துபோய்விடும் நிலை ஏற்பட்டுள்ளது.