Seeman: மறைந்த காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா முதலில் நாம் தமிழர் கட்சியில் இணைய தன்னை அணுகினார் என ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் சீமான் பேசியுள்ளார்.  ஈரோடு கிழக்கு சட்டமன்றத்துக்கான  இடைத்தேர்தல் அரசியல் கட்சிகள் மும்முறமாக இயங்கி வருகின்றன. வேட்பாளர் அறிவிப்பு தொடங்கி பிரச்சாரம் என திமுக, நாம் தமிழர், தேமுதிக, அமமுக கட்சிகள் களத்தில் குதித்து விட்டது.


இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேனகா என்பவர் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த இடைத் தேர்தலில் இதுவரை அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களில் இவர் தான் பெண் வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பிரச்சாரக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


அப்போது அவர் பேசியதாவது, மறைந்த திருமகன் ஈ.வெ.ரா நாம் தமிழர் கட்சியில் இணைய தன்னை அணுகியதாக கூறியுள்ளார். "அதன் பின்னர் அவரது தந்தை என்ன சொன்னார் என்பது தெரியவில்லை, நானும் அவரை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டேன். அவர் இறந்தது எனக்கு பெரும் துயரம். அவரது தந்தையிடம் துயரத்தைப் பகிர்ந்து கொண்டேன். ஒன்றரை ஆண்டுகள் சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்த திருமகன் மக்கள் பிரச்சினை குறித்து எப்போதாவது பேசியிருக்கிறாரா என்றால் இல்லை”  இவ்வாறு அவர் பேசியுள்ளார்.


இதில் மறைந்த திருமகன் ஈவெரா நாம் தமிழர் கட்சியில் இணைய தன்னை அணுகினார் என சீமான் பேசியது வைரலானது. இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் மறைந்த திருமகன் ஈவெரா-வின் தந்தையும் ஈரோடு கிழக்கு திமுக கூட்டணி வேட்பாளருமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியதாவது, ”சீமான் அடிக்கடி உணர்ச்சி வசப்படுபவர்.  ஒவ்வொரு நாளுக்கும் ஒரு கருத்துக்களை சொல்பவர். மாற்றி மாற்றி பேசும் போக்கினை சீமான் மாற்றி கொள்ள வேண்டும்” என்றார்.


மேலும், ஒன்றிய அமைச்சராக இருந்து விட்டு எம்.எல்.ஏ தேர்தலில் போட்டியிடுவது தகுதி குறைவல்லவா என கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம், ”கலெக்டராக இருந்தாலும் பியூனாக இருந்தாலும் மக்கள் சேவை செய்ய வேண்டும் என்பது தான் விருப்பம். அதை போலவே  ஒன்றிய அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினராக ஏற்கனவே இருந்த போதிலும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதை தரக்குறைவாக கருதவில்லை. மக்கள் பணி செய்ய வேண்டும் என்பது தான் என் நோக்கம். கலெக்டராக இருந்தாலும் பியூனாக இருந்தாலும் சிறப்பாக பணியாற்றுவேன்” என்றார்.


பாஜக அண்ணாமலை ட்வீட்  குறித்த கேள்விக்கு, ”திருவண்ணாமலைக்கும் போக விரும்பவில்லை, அண்ணாமலைக்கும் பதில் சொல்ல விரும்பவில்லை” என்றார்.


அதேபோல், ”என் மகன் விட்டுச்சென்ற பணியை தொடரவும், முதல்வர் மற்றும் ராகுல்காந்தி ஆகியோரை ஊக்குவிக்கவும் கைசின்னத்திற்கு  வாக்களிக்க வேண்டும் என மக்களை கேட்டுக்கொள்கிறேன்” எனவும் அவர் கூறினார்.