Erode East By Election: அமைச்சர் நேரு குறித்த வீடியோ ஒன்றை பாஜக தலைவர் அண்ணாமலை பகிர்ந்துள்ளார். அது தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 


ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததைத் தொடர்ந்து அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன. அதைத் தொடர்ந்து இந்த தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தங்களின் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைப் பெறுவது, வேட்பாளரைத் தேர்வு செய்வது, வாக்கு சேகரிப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. 


ஆளும் திமுக தரப்பை பொறுத்தவரையில்  இந்த இடைத் தேர்தலில் வென்று தனது நிலையினை (மக்கள் மத்தியில் திமுகவுக்கு உள்ள பல்ஸ்) பார்த்துக் கொள்ள ஒரு வாய்ப்பு. இந்த தேர்தலில் தோற்றால் கூட இன்னும் மீதமுள்ள மூன்று ஆண்டில் மக்கள் மத்தியில் தனக்கான நற்பெயரை சம்பாதித்துக் கொள்ள முற்படும். ஆனால், அதிமுக தரப்பை பொறுத்தவரை அதிமுகவின் கோட்டை எனப்படும் கொங்கு மண்டலத்தில் நடக்கும் தேர்தல் என்பதால் இதில் வென்றாக வேண்டும் என மும்மரமாக செயல்பட்டு வருகிறது.  இன்றைய அதிமுகவின் பெரும் தலைகளாக இருக்க கூடிய எடப்பாடி பழனிச்சாமி, கே.ஏ. செங்கோட்டையன், கே.சி. கருப்பணன், தங்கமணி, வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட பெரும் படையே இருக்கும் போது இந்த இடைத் தேர்தலில் வென்றால் தான் அவர்களுக்கான அங்கீகாரம் மக்கள் மத்தியில் எப்படி இருக்கும் என்பதும் தெரியும். 


தேர்தல் களம் இப்படி இருக்க, செய்தியாளர் சந்திப்பில் அருகில் மைக்குகள் ஆனில் இருப்பதை கண்டுகொள்ளாமல், திமுக கூட்டணியில் தேர்தலில் களமிறங்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனிடம், அமைச்சர் கே.என். நேரு பேசியதாக,  தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அமைச்சர் நேரு பேசுவதாக குறிப்பிடப்பட்டுள்ளதாவது,






”அவன் என்னாத்துக்கு அவன் தண்டம். மந்திரியெல்லாம், கூடாது, தேவையில்லை, நான் நேத்தே சொல்லிட்டேன்,  எல்லாரும் வந்துடுங்க சொல்லீட்டேன். மாவட்ட நிர்வாகிகள் எல்லாம் நான் கண்டுக்க மாட்டேன் நீங்க அங்க இருங்க, சொல்லனும்னு நெனச்சேன். நீ காசு பணமெல்லாம் கொடுக்கனும் எல்லா மாவட்ட தலைவரையும் கூப்பிட்டு Platinum Mahal, மத்தியானம் எல்லாரையும் கூப்பிட்டு பணம் குடுத்து செட்டில் பண்ணீட்டு. 30,31, பிப்ரவரி 1ஆம் தேதிக்குள்ள எல்லாத்தையும் பண்ணி முடுச்சுடனும், 31 பூத்திலும் 10,000 பேரை ரெடி பண்ணனும். நாளைக்கு தலைவர் ஸ்டாலினே அதிகாரிகளுக்கு வாட்ச், பிரியாணி தரப் போறாரு. இப்போ புறப்பட்டு நான் திருச்சி போய், அங்கிருந்து சென்னை போய், அங்க கூட்டத்த முடுச்சுட்டு கோயமுத்தூர் போய் 31ஆம் தேதி இங்க வந்துருவேன். எல்லாத்தையும் முடுச்சுட்டேன். பழனி அண்ணன் வரதையும், மகேஷ் வந்தா பாப்போம், இல்ல நம்மலே பண்ணீடுவோம். நாசர் 5க்கு மேல வேண்டாம் வேண்டாம் என்கிறான். நாசர்னு போட்டா சங்கடப்பட்டு கிடக்கிறான். அங்க இருக்க லோக்கல் ஆளுங்க, அண்ணங்கனாலே.. விடுதலை சிறுத்தைகள்.. அவங்க எல்லாம் கொடுக்கவில்லையே பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால் நம்ம குடுத்து விடலாம், நான் கொடுத்துட்டேன். செந்தில் பாலாஜியும் கொடுத்து விட்டார்.” என தமிழ்நாடு  பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வீடியோவில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 



ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுடன் பேசும் அமைச்சர் நேரு


 


இந்த சர்ச்சை வீடியோவை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஜனவரி 29 ஆம் தேதி இரவு 8. 55 மணிக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆனால் இதுவரை திமுக தரப்பில் இருந்து எந்தவிதமான மறுப்போ, விளக்கமோ தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  


இது குறித்து அமைச்சர் நேருவை நாம் தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு வேட்பாளருமான, ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை தொடர்புகொண்டதில், அவர் ”தான் இன்னும் அந்த வீடியோவை பார்க்கவில்லை” என கூறினார்.